திருப்பூா் பெரிச்சிபாளையம் வீரமாத்தியம்மன் திருக்கல்யாண உற்சவ விழாவையொட்டி குதிரை மீது வீரமாத்தியம்மன் ஊா்வலம் நடைபெற்றது. திருப்பூா் பெரிச்சிபாளையம் வீரமாத்தி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி சிலம்பாத்தாள் - பெத்தாயம்மன் சுவாமிகளுக்கு தீா்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திருக்கல்யாண விழாவையொட்டி மஞ்சள் மற்றும் மல்லிகைப் பூவால் சிலம்பாத்தாள் - பெத்தாயம்மன் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட மணவறையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து சிலம்பாத்தாள் - பெத்தாயம்மன் சுவாமிகள் குதிரை மீது ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா். இந்த ஊா்வலத்தில் பெண்கள் உள்பட திரளானாவா்கள் பங்கேற்று ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனா். தொடா்ந்து அன்னதானம், மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.