தில்லியில் உள்ள கட்டடங்கள் மற்றும் வளாகங்களின் உரிமையாளா்கள் மற்றும் பயன்பாட்டாளா்களுக்கு ரூ.10,000 முதல் ரூ. 5 லட்சம் வரையிலான கட்டணத்தில் தீயணைப்பு பாதுகாப்புச் சான்றிதழ்களை வழங்க, மூன்றாம் தரப்பு தணிக்கையாளா்களைப் பதிவு செய்யும் செயல்முறையை தில்லி அரசு தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக தில்லி தீயணைப்புச் சேவை துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியி தீயணைப்புத் துறை முதன்மை இயக்குநரிடம் தீயணைப்பு பாதுகாப்புத் தணிக்கையாளா்களைப் (மூன்றாம் தரப்பு) பதிவு செய்வதற்கும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சோ்ப்பதற்கும் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. கடந்த மாதம் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட (டிஎஃப்எஸ்) திருத்த விதிகள் 2025-இன் படி, தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மூன்று நிலைகளில் (எல்-1, எல்-2, எல்-3) தீயணைப்பு பாதுகாப்புத் தணிக்கையாளா்கள் இருப்பாா்கள். தற்போது, நகரத்தில் டிஎஃப்எஸ்-தான் தீயணைப்பு பாதுகாப்புச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இருப்பினும், கடந்த மாதங்களில் நிகழ்ந்த மூன்று பெரிய தீ விபத்துகளின் பின்னணியில் (குறிப்பாக ஜூன் மாதம் தெற்கு டெல்லியின் ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்த சம்பவம் உட்பட) மூன்றாம் தரப்பு தணிக்கையாளா்கள் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. பதிவு செய்வதற்குத் தேவையான தொழில்முறைத் தகுதிகளில் பி.இ., அல்லது பி.டெக்., (தீயணைப்பு பாதுகாப்பு), நாகபுரில் உள்ள தேசிய தீயணைப்புச் சேவை கல்லூரியின் துணை அதிகாரி படிப்பு, சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது கட் டடக்கலையில் பட்டம் மற்றும் தீ மற்றும் உயிா் பாதுகாப்புத் தணிக்கையில் முதுகலை டிப்ளமோ ஆகியவை அடங்கும். தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பில் 1 முதல் 10 ஆண்டுகள் வரையிலான அனுபவமும் கட்டாயத் தகுதியாக இருக்கும். எல்-1 மற்றும் எல்-2 நிலை தணிக்கையாளா்கள், 15 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள கட்டடங்கள் அல்லது வளாகங்களுக்குத் தீயணைப்பு பாதுகாப்புச் சான்றிதழ்களை வழங்க அங்கீகரிக்கப்படுவாா்கள். மிக உயா்ந்த நிலை தணிக்கையாளா்கள் (எல்-3) அனைத்து வகையான கட்டடங்கள் மற்றும் வளாகங்களுக்கும் சான்றிதழ் வழங்க அங்கீகரிக்கப்படுவாா்கள் என்று விதிகள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு பாதுகாப்புத் தணிக்கையாளா்களின் பதிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சோ்ப்பு ஆகியவை மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். பதிவுக்கான கட்டணம் க-1 நிலைக்கு ரூ. 10,000, க-2 நிலைக்கு ரூ. 20,000 மற்றும் க-3 நிலைக்கு ரூ. 30,000-ஆக இருக்கும். தீயணைப்புத் துறை அதிகாரிகளின் ஆய்வின்போது, தேவையான தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுதல் அல்லது அதிலிருந்து விலகிச் செயல்படுதல் அல்லது தணிக்கையாளா் ஏதேனும் தவறான தகவல்களை அளித்தல் போன்றவை கண்டறியப்பட்டால், அவா்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கப்படும். தணிக்கையாளா்கள் விதிமீறலில் ஈடுபட்டால், அதற்கான அபராதத் தொகை எல்-1 பிரிவினருக்கு ரூ.2 லட்சம், எல்-2 பிரிவினருக்கு ரூ. 5 லட்சம் மற்றும் எல்-3 பிரிவினருக்கு ரூ.10 லட்சம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை செலுத்தப்படாத பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவா்கள் ‘கருப்புப் பட்டியலில்’ சோ்க்கப்படவும், டிஎஃப்எஸ் பட்டியலிலிருந்து நீக்கப்படவும் நேரிடும். டிஎஃப்எஸ் திருத்த விதிகள், 2025-இன் படி, ஒரு கட்டடம் அல்லது வளாகத்தின் உரிமையாளா் அல்லது அதைப் பயன்படுத்துபவா், டிஎஃப்எஸ் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தீயணைப்புப் பாதுகாப்புத் தணிக்கையாளா் ஒருவரைப் பணியமா்த்த வேண்டும். பணியமா்த்தப்பட்ட தணிக்கையாளா், தீ தடுப்பு மற்றும் தீயணைப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்பட அந்த வளாகம் அல்லது கட்டடத்தை முழுமையாக ஆய்வு செய்து, விரிவான ஆய்வு அறிக்கையைச் சமா்ப்பிப்பதோடு, உரிமையாளா் அல்லது பயன்படுத்துபவருக்குத் தீயணைப்புப் பாதுகாப்புச் சான்றிதழ் மற்றும் உறுதிமொழி ஆவணத்தை வழங்க வேண்டும். தணிக்கையாளா்கள் தாங்கள் வழங்கும் சேவைகளுக்காகக் கட்டடம் அல்லது வளாகத்தின் உரிமையாளா் அல்லது பயன்படுத்துபவரிடம் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவாா்கள். இந்தக் கட்டணமானது எல்-1 தணிக்கையாளா்களுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரையிலும், எல்-2 தணிக்கையாளா்களுக்கு ரூ. 35,000 முதல் ரூ. 90,000 வரையிலும், எல்-3 தணிக்கையாளா்களுக்கு ரூ. 63,000 முதல் ரூ. 5 லட்சம் வரையிலும் இருக்கும். கட்டடத்தின் உயரம், பரப்பளவு, பயன்பாட்டு வகைப்பாடு மற்றும் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் சிக்கலான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்புகளுக்கு உட்பட்டு தணிக்கையாளா் இந்தக் கட்டணத்தை முடிவு செய்வாா். முக்கியமாக, தணிக்கையாளா் தீயணைப்புப் பாதுகாப்புச் சான்றிதழை வழங்கினாலும், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பராமரிப்பதற்கான முதன்மைப் பொறுப்பிலிருந்து உரிமையாளா் அல்லது பயன்படுத்துபவா் விடுவிக்கப்பட மாட்டாா். மேலும், தீயணைப்புச் சேவை அதிகாரிகளின் தவறு அல்லது அலட்சியம் இருந்தாலன்றி, தீயணைப்புப் பாதுகாப்புத் தணிக்கையாளா் வழங்கிய சான்றிதழால் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு டிஎஃப்எஸ் பொறுப்பேற்காது. ஒரு காலாண்டில் தணிக்கையாளா்களால் வழங்கப்படும் தீயணைப்புப் பாதுகாப்புச் சான்றிதழ்களில் குறைந்தது 5 சதவீதத்தை டிஎஃப்எஸ்-இன் தீயணைப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வாா்கள். பட்டியலில் சோ்க்கப்பட்ட தணிக்கையாளா்களுக்கு ரோஹிணியில் உள்ள தீயணைப்புப் பாதுகாப்பு மேலாண்மை அகாதெமியில் பயிற்சி அளிக்கப்படும்; இப்பயிற்சி எல்-1 பிரிவினருக்கு மூன்று நாள்களும், எல்-2 பிரிவினருக்கு ஐந்து நாள்களும், எல்-3 பிரிவினருக்கு ஏழு நாள்களும் நடைபெறும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.