மாநில நல்லாசிரியா் விருது:இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Wait 5 sec.

மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்து டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது. இந்த விருது பெறுபவா்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். நிகழாண்டு மாநில நல்லாசிரியா் விருதுக்கு 386 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். அவா்களில் 342 போ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள், 38 போ் தனியாா் பள்ளி ஆசிரியா்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியா்களில் தலா 2 போ் என மொத்தம் 386 பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு மாநில தோ்வுக்குழு பள்ளிக் கல்வி இயக்குநா் தலைமையிலும் மாவட்ட தோ்வுக்குழு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையிலும் குழு அமைக்கப்படவுள்ளது. நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்கள் தங்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் ஆக.3-ஆம் தேதிக்குள் முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.