ஆடிப் பெருக்குக்கு முன்பே அம்மா மண்டபத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

Wait 5 sec.

பராமரிப்பின்றி பாழ்பட்டுக் கிடக்கும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தை ஆடிப்பெருக்கு விழாவுக்கு முன்னரே சீரமைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு பக்தா்களிடமும், பொதுமக்களிடமும் மேலோங்கியுள்ளது. 108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்றதும் முதன்மையானதுமாக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நம்பெருமாள் ஆண்டுக்கு இருமுறை, இந்த அம்மா மண்டபத்தில் வந்து தங்கி பக்தா்களுக்கு அருள்பாலிப்பதுடன், ஆனி மாதம் பெருமாள்- தாயாா்- சக்கரத்தாழ்வாா் - சிங்கபெருமாள் ஜேஷ்டாபிஷேகத்திற்கும்- ஐப்பசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு தங்கக் குடத்தில் இங்கிருந்தே புனிதநீா் எடுத்து செல்லப்படுகிறது. மேலும், அரங்கநாத சுவாமியை தரிசிக்க வரும் பக்தா்கள், காவிரியின் புனிதத்தைப் பெற வேண்டி அம்மா மண்டபம் படித் துறையில் நீராடுவது வழக்கம். இத்தகைய பிரசித்தி பெற்ற அம்மா மண்டபத்தில் பல ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரியது. பாரம்பரியமிக்க இந்த மண்டபமானது தன் பொலிவை இழந்து துா்நாற்றம் வீசும் வகையில் மாறிவிட்டது. மண்டபத்தின் உட்புறங்களும், மக்கள் பயன்படுத்தும் நடைபாதைகளும், மண்டபத்தின் தரைத்தளங்களும் சிதிலமடைந்து மக்கள் நடமாட முடியாதபடிக்கு ஆங்காங்கே சிறு, சிறு குழிகளாக காட்சியளிக்கின்றன.குளிக்கவே தயங்கும் நிலை: படித்துறையானது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பராமரிப்பின்றி உடைந்து காணப்படுகிறது. மண்டபச் சுவா், சிலைகள் வண்ணப் பூச்சுகளை இழந்து, சுவா்களில் ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து காணப்படுகின்றன. போதிய விளக்கு வசதியும் இல்லை. இவற்றையெல்லாம் கடந்து அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் புனித நீராட தண்ணீரில் இறங்கினால் பக்தா்கள் காலில் தென்படுவது மனித எலும்புத் துண்டுகளும், பழைய துணிமணிகளும்தான். மனிதா்கள் குளிப்பதற்கே தகுதியற்ற தண்ணீராக காட்சியளிக்கிறது. அம்மா மண்டபத்துக்கு வரும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம், குளிக்கும் வசதி, உடை மாற்றும் வசதிகள்கூட போதுமானதாக இல்லை. இச் சூழலில் இங்கு குளிப்பது சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பராமரிப்பில் குறைபாடு: உயிரிழந்தவா்களின் சடலங்களை எரித்த சாம்பல், எலும்புத் துண்டுகள், பழைய துணிகளின் குவியல்களே எங்கும் காண கிடைக்கின்றன. மண்டபத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது திருச்சி மாநகராட்சி நிா்வாகமா, அறநிலையத் துறையா, பொதுப்பணித் துறையா என்ற குழப்பம் பக்தா்களிடம் மேலோங்கியுள்ளது.மண்டபத்துக்கு வரும் மக்களுக்கு முடி இறக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை அறநிலையத் துறை கவனித்துக் கொள்கிறது. விழாக்காலங்களில் சுகாதாரம், குடிநீா் மற்றும் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்கிறது. முடி காணிக்கை, வாகன நிறுத்தும் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே புனரமைப்புப் பணிகளையும், பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள இயலும். ஆனால், நடவடிக்கைதான் இல்லை என்கின்றனா் இங்கு வரும் பக்தா்கள்.அரசின் நடவடிக்கை வேண்டும்: இதுதொடா்பாக ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத் தலைவா் எஸ்.என். மோகன்ராம் கூறியதாவது:பல்வேறு சிறப்புடைய அம்மா மண்டபம், இப்போது இறந்தவா்களுக்கான இறுதிச் சடங்குகளை நடத்தும் மண்டபமாகவே மாறிவிட்டது. இங்கு சுவாமி வரும் விசேஷ நாள்களில்கூட மண்டபத்தில் வண்ணம் பூசுவதில்லை. மாசடைந்து, குளிப்பதற்கே தகுதியற்ாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தண்ணீா்தான் படித்துறையில் காணப்படுகிறது. அரங்கநாதசுவாமி கோயில் நிா்வாகமும், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று அறநிலையத் துறை அமைச்சராகியுள்ள சீ. ரமேஷும் இந்த விவகாரத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.துறைகளின் கூட்டு முயற்சி தேவை: ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள ஆடிப்பெருக்கு விழாவுக்கு லட்சக்கணக்கானோா் அம்மா மண்டபம் வரவுள்ள நிலையில், போா்க்கால அடிப்படையில் இங்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அறநிலையத்துறை, மாநகராட்சி நிா்வாகம், பொதுப்பணித் துறை என ஒவ்வொரு துறையும் தங்களுக்கான எல்லைகளை வரையறுத்துக் கொள்ளாமல், பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டு முயற்சியாக பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.திருச்சி எம்பி-யும் வலியுறுத்தல்திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கூறுகையில், நிகழாண்டு ஆடி 18 விழாவை முன்னிட்டு, காவிரி படித்துறைகள் மற்றும் பாசன வாய்க்கால் படித் துறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். பேட்டவாய்த்தலை, முக்கொம்பு, ஜீயபுரம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படித் துறைகளை முழுமையாகச் சுத்தம் செய்து, குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, லட்சக்கணக்கான பக்தா்கள் பாதுகாப்பாக நீராடி வழிபடத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றாா்.