தனது நட்பு நாடுகளைத் தேர்ந்தெடுத்து பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்க ஒவ்வொரு நாடும் தனக்கான பாதையை தானே வகுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வல்லமைக்கான தேடல் பூமியை சர்வாதிகார உலகமாக உருவெடுக்க செய்கிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியானது, வெனிசுலா மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளின் மீது பதற்றத்தை ஏற்படுத்துகிறது.எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி கொண்டு இயங்கும் உள்ளெரி பொறி வெப்ப இயந்திரங்களுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சார வாகன தொழில்நுட்பங்களுக்கும் இடையேயான தொழில்நுட்பப் போட்டிகளும் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.நாடுகளுக்கு இடையேயான இந்தத் தீவிரமான போட்டியில், பருவநிலை மாற்றம் போன்ற வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ள அவசியமான உலகளாவிய ஒத்துழைப்பு குறையத் தொடங்கியுள்ளது. எரிசக்தி மாற்றம் மட்டுமே காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதம் என உலக நாடுகள் கருத இயலாது. அரிய கனிமங்கள், நிலக்கரி, எண்ணெய் போன்ற மூலப் பொருள்களின் விநியோகச் சங்கிலிகள், பதப்படுத்தும் திறன், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளும் காலநிலை மாற்றத்தை தீர்மானிக்கும்.எண்ணெய் வள நாடுகளுக்கும் மின்சார வள நாடுகளுக்கும் இடையிலான பிளவு ஏற்படுத்தும் கொடூர போட்டியில் காலநிலை மாற்றம் என்பது ஒரு பக்கவிளைவு மட்டுமே.இன்றைய புவிசார் அரசியலில் ஆர்க்டிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் ஓர் ஆழமான முரண்பாட்டை முன்வைக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக ஆர்க்டிக் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதன் விளைவாக இப்போது பூமியின் "கிரீடம்' என்று அழைக்கப்படும் ஆர்க்டிக் வழியாகப் பயணிப்பதன் மூலம், கப்பல்களால் கண்டங்களை விரைவாகக் கடக்க முடிகிறது.இந்தப் பாதைகள் ரஷியாவும் சீனாவும் உலகின் மேற்கு அரைக்கோளத்தை அடைய சாதகமாக இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆர்க்டிக் பிராந்தியத்தின் எண்ணெய், கனிம வளங்களை உலகுக்கு காட்டப் போகும் உருகும் பனியானது, அந்தப் பகுதியின் கனிம வள சுரண்டலுக்கு வழிவகுக்கும். உலகளாவிய வானிலை அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பனிப் பிரதேசங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.நிலக்கரி, இரும்புத் தாது, பாக்சைட் போன்ற கனிமங்களுக்கான உலகின் தேவை அதிகமாக இருப்பதாக பரவலாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மின்மயமாக்கல், பசுமைத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை நோக்கிய உந்துதல் ஆகியவற்றின் காரணமாக அடுத்த பத்தாண்டுகளில் செம்புக்கான உலகளாவிய தேவை இரட்டிப்பாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இதனால், செம்பு இருப்பு அதிகம் உள்ள நாடுகளான பெரு, சிலி, காங்கோ ஆகியவற்றின் மீது உலகின் கவனம் திரும்பி உள்ளது. தேவை அதிகரித்து வருவதால், அடர்ந்த காடுகள், பல்லுயிர் வளம் நிறைந்த பகுதிகளில் மேலும் பல சுரங்கங்கள் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. செம்பு உருக்காலைகளுக்கான தேவை அதிகரிக்கும்போது மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அதிக முதலீடும் தேவைப்படும். உலகளாவிய செம்பில் சுமார் 50 சதவீதத்தை சீனா பதப்படுத்தி சுத்திகரிக்கிறது. லித்தியம், கிராஃபைட் போன்ற அரிய வகை கனிமங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்கும் சீனா, பசுமைத் தொழில்நுட்ப செயலாக்கத்திலும் முன்னணியில் உள்ளது. சீனாவின் வழியைப் பின்பற்றி மற்ற நாடுகள் புதிய சுரங்கங்களையும் ஒப்பந்தங்களையும் கண்டறியும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் செலவுகள் காரணமாக ஒரு காலத்தில் வெளிநாட்டு உற்பத்தியை விரும்பிய பணக்கார நாடுகள், இப்போது அந்தச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மாறாக, இந்த பணக்கார நாடுகள் மெர்கோசர் கூட்டாண்மை போன்ற பொதுவான அமைப்புகளை உருவாக்கி உலகம் முழுவதும் உற்பத்திச் செலவுகளை அதிகரிக்கச் செய்யலாம்."மெர்கோசர்' என்பது மெர்காடோ கொமுன் டெல் சூர் என்பதன் சுருக்கமாகும். ஸ்பானிய மொழியில் இதன் பொருள், தெற்குப் பொதுச் சந்தை என்பதாகும். இது தென் அமெரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பொருளாதார மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பாகும். வருமானம், சந்தைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் மெர்கோசருக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய விவசாயிகள் எதிர்க்கின்றனர்.புவிசார் அரசியல் மற்றும் சுயலாப பொருளாதாரக் கொள்கைகளால் உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவு, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் பசுமைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும் எந்த வகையிலும் உதவாது என உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். டாவோஸ் நகரில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உலக நாடுகளுக்கு இடையேயான இந்த முரண்பாடு தெளிவாகத் தெரிந்தது.அமெரிக்கா புதைபடிவ எரிபொருள்களுக்கும், சீனா பசுமை உள்கட்டமைப்பு, பசுமை ஆற்றல், பசுமை கனிமங்கள் மற்றும் பசுமை நிதிக்கும் முக்கியத்துவம் அளித்தன. உலக நாடுகள், தங்களின் நட்பு நாடுகளுக்கான எரிசக்தி விநியோகத்துக்கும் விநியோகச் சங்கிலிகளுக்கும் இடையில் சிக்கியுள்ளன.பூமிக்கும், பூமிவாழ் உயிரினங்களுக்கும் சிறந்ததாக இருக்குமா என்ற கேள்விக்கு விடையளிக்க விரைவாக ஒரு புதிய உலகம் உருவாகி வருகிறது.