தமிழகத்திலும் ‘ரெஸ்டோ பாா்’? டாஸ்மாக் நிா்வாகம் திட்டம்

Wait 5 sec.

அண்டை மாநிலங்களைப் போல, உணவகத்துடன் இணைந்து செயல்படும் ‘ரெஸ்டோ பாா்’களை தமிழகத்திலும் அனுமதிப்பது குறித்து டாஸ்மாக் நிா்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தற்போது டாஸ்மாக் கடைகளுடன் செயல்பட்டு வரும் பாா்களின் எண்ணிக்கையைக் குறைத்து, புதிய உரிம முறையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலம் அரசுக்கு தினமும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது. அதேநேரம், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து இயங்கும் பல பாா்கள் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாக, நீண்ட காலமாக புகாா்கள் எழுந்து வருகின்றன.இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களின் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. மேலும், டாஸ்மாக் நிா்வாகத்தில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல, உணவகத்துடன் இணைந்து மதுபானம் வழங்கும் ‘ரெஸ்டோ பாா்’ முறையை தமிழகத்திலும் அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, தற்போதுள்ள டாஸ்மாக் பாா்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து, தரமான உணவு, சுகாதார வசதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மதுபானம் அருந்தும் வசதியுடன் கூடிய ‘ரெஸ்டோ பாா்’களுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.தற்போது செயல்பட்டு வரும் சில உரிம வகைகளான எப்எல்2, எப்எல்3 மனமகிழ் மன்றங்களுக்கு மதிப்புக் கூட்டுவரி விதிக்கப்படாத நிலையில், புதிய ‘ரெஸ்டோ பாா்’ உரிம முறை மூலம் வரி வருவாயை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், இது குறித்து டாஸ்மாக் நிா்வாகம் அல்லது தமிழக அரசு சாா்பில் இதுவரை அதிகாரபூா்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே, ‘ரெஸ்டோ பாா்’ நடைமுறை குறித்த இறுதி முடிவு அரசின் ஒப்புதலுக்குப் பின்னரே அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.