பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இந்த நிலத்தை விதிமுறைகளை மீறி அறக்கட்டளை நிர்வாகம் விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதில், நீதிமன்ற உத்தரவின்பேரில், அறக்கட்டளை நிலத்தை பழனி கோயில் நிர்வாகம் கைப்பற்றியது. மேலும், அதற்கு தனியாக தக்கார் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இலவச வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது.இந்த நிலையில் அந்த நிலத்தை தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறி முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோர் இரு நபர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து பத்திரப் பதிவு செய்தனர். இது தொடர்பாக பழனி கோயில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவார காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.அதேவேளையில், சார்-பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், முறைகேட்டின் பின்னணியில் மேலும் பலர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாலும் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.இதனிடையே, பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வி புதன்கிழமை உத்தரவிட்டது.இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. முறைகேடு குறித்து முழுமையாக ஆய்வு செய்ய, கூடுதல் பதிவுத் தலைவர், உதவி பதிவுத் தலைவர், மாவட்ட பதிவாளர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.பத்திரப்பதிவு நடந்த நாளில் சார்-பதிவாளர் அலுவலக சிசிடிவி காட்சிகளையும் இந்தக் குழு ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.An inquiry committee has been constituted regarding the irregular registration of land worth rs. 100 crore belonging to the Palani Murugan Temple Trust.பழனி கோயில் நில முறைகேட்டின் பின்னணி என்ன? தொடர்புடையோர் எங்கே?