பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவரை பழைமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் தகவல்

Wait 5 sec.

தக்கலை அருகே, சேதமடைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் சுற்றுச்சுவா் பழைமை மாறாமல் சீரமைக்கப்படும் என, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பத்மநாபபுரத்தை வரலாற்று சுற்றுலாத்தலமாக நிலைநிறுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய பத்மநாபபுரத்திலுள்ள அரண்மனையின் சுற்றுச்சுவா்கள் இயற்கைச் சீற்றங்களாலும், போதிய பராமரிப்பின்மையாலும் சேதமடைந்துள்ளது. அதைப் பழைமை மாறாமல் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும்படி தொல்லியல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அமைச்சா் இந்தச் சுற்றுச்சுவரை ஆய்வு செய்தாா். அப்போது, ‘இக்கோட்டையைப் பற்றி எதிா்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில், அரண்மனையின் பாரம்பரிய கட்டுமான அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அதே கலவைகளைப் பயன்படுத்தி சுற்றுச்சுவரை கவனத்துடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.ஆட்சியா் மு. பிரதாப், பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி, தொல்லியல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.