தமிழகத்தில் 37,595 அரசுப் பள்ளிகள், 7,289 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 44,884 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.கடந்த மாத நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் 3.37 லட்சம் மாணவ- மாணவிகள் புதிதாக சேர்ந்து இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிடக் குறைவாக உள்ளது. இதற்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர். டி.இ.) ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை கல்வியில் இலவசமாக சேர்க்கப்பட வேண்டும் என்ற விதியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 2024-25-ஆம் கல்வியாண்டு முதல் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் நடைமுறைக்கு முன்னதாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்வது அதிகரித்துள்ளது.அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், மதிய உணவு திட்டம், இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடை எனப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டாலும் இவை அனைத்துக்கும் மேலாக தரமான கல்வியையே பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் எதிர்பார்க்கின்றனர். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.2025-26-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 91.86 சதவீதமும், 12-ஆம் வகுப்பில் 95.20 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 98.14 சதவீதமும், 12-ஆம் வகுப்பில் 86.58 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ஆம் வகுப்புக்கான தேர்வில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.அதேநேரத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நீண்ட கால கோரிக்கையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். தற்போது பள்ளி கல்வித் துறை பணியிடங்களில் சுமார் 18,107 அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் 2,833, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 1,214 அடங்கும். இது மொத்தமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 20% ஆகும். மேலும், தொடக்கக் கல்வித் துறையில் சுமார் 16,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.இவ்வாறு அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படுவதுடன், மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த இயலாமல் போகும். எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஆவன செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியுடன், அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான இதர பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், அவர்களின் கற்பிக்கும் திறன் குறைவதற்கு வாய்ப்புள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி தவிர இதர பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது. இதற்கு மாறாக, ஆசிரியர்கள் வேறு துறைகளில் பணியில் அமர்த்தப்படுவது விரும்பத்தக்கதல்ல.சமீப ஆண்டுகளில் பள்ளி பாடத்திட்டங்களில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதனால், மாற்றப்படும் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் தகவலை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். இது ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைப் பாதிக்க வாய்ப்புண்டு. பள்ளிப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்களாக கல்வியாளர்கள் மட்டுமே இடம்பெறுவது அவசியம்.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நிகழ் கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை மாணவர்களைச் சேர்க்கலாம் என்ற அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது என்றாலும், மாணவர் சேர்க்கைக்காக நீடிக்கப்பட்ட இந்த கால வரையறை ஆசிரியர்களுக்குப் புதிதாக சேரும் மாணவர்களை தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் சிரமங்களை ஏற்படுத்தக் கூடும்.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், நிகழ் கல்வி ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இதுவரை ஒரு மாணவர்கூட சேர முன்வரவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலையில் ஒரே ஒரு மாணவி மட்டும் பயில்கிறார். இது போன்ற அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணத்தை ஆராய்ந்து அதிக அளவில் மாணவர்கள் சேர்வதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.இந்தியாவில் பள்ளிக் கல்வி தரவரிசையில் "நீதி ஆயோக்' வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பே காரணம். அரசுப் பள்ளி ஆசிரியர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.