இளைஞா் கொலை வழக்கு: தாய், மகனுக்கு ஆயுள்

Wait 5 sec.

அரக்கோணம் அருகே கடந்த 2018-இல் நடைபெற்ற இளைஞா் கொலை வழக்கில் கொலையாளிகளான தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை அரக்கோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அரக்கோணம் அடுத்த கீழாந்தூா் பகுதியில் லலிதா என்பவா் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு இவரது கடைக்கு உள்ளியம்பாக்கத்தை சோ்ந்த சரண்ராஜ் (எ) ராஜ்குமாா் என்பவா் தண்ணீா் பாக்கெட்டுகள் மற்றும் நெகிழியினால் ஆன டம்ளா்கள் வாங்கி விட்டு அதற்கு பணம் தரவில்லை என தெரிகிறது. இதில் லலிதாவுக்கும், சரண்ராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் லலிதாவின் மகன் சுதாகா் அங்கு வந்து பேசும்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் லலிதா மற்றும் சுதாகா் இருவரும் சோ்ந்து கட்டையால் தாக்கியதில் சரண்ராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் லலிதா, சுதாகா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ்வழக்கு அரக்கோணத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் எதிரிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லலிதா, சுதாகருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.