இயக்குநர் பாரி இளவழகன் எழுதி இயக்கி நடித்துள்ள அன்பே டயானா திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளன. படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.சென்னையில் குடியேறிய தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்தவராக நடித்திருக்கிறார் பாரி இளவழகன். இவரின் முந்தைய திரைப்படமான ஜமா விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதிலிருந்து அப்படியே நேர் எதிரான வணிக சினிமாவை உருவாக்கி இருக்கிறார். அப்பா பாஸ்கரன் (சேத்தன்) ரயில்வே துறை பணியாளர், அம்மா சரளா (ரோஜா) மாவுக்கடை நடத்தும் அச்சு அசலாக சாதியையும், மதத்தையும் பின்பற்றும் குடும்பத்தலைவி. நாயகியாக வரும் மேஜிக் (ரம்யா ரங்கநாதன்) கிருஷ்ணாவிற்கு நேர் எதிரான கலாச்சார பின்புலம் கொண்ட ஆங்கிலோ இந்தியன் பெண்.ஆங்கில இந்திய பெண்ணான மேஜிக்கை கல்லூரி காலத்திலிருந்து காதலிக்கிறார் கிருஷ்ணா. எப்படியாவது தனது காதலை ஏற்கச் செய்துவிடலாம் எனும் நம்பிக்கையில் அவளிடம் காதலை சொல்லி காத்திருக்கிறார் நாயகன் கிருஷ்ணா. இவர்கள் இருவரின் காதல் கைகூடியதா? இல்லையா? சாதி பார்க்கும் சரளா தனது மகளின் காதலுக்காக ஆங்கிலோ இந்தியன் பெண்ணை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே அன்பே டயானா திரைப்படத்தின் கதை.வணிகரீதியாக தனது படத்தை அமைத்துக் கொள்ள முடிவெடுத்த பாரி அதற்காக நகைச்சுவையைக் கைகொண்டிருக்கிறார். முதல் பாதி முழுக்க காதலுக்காக உருகுவது, தனது வீட்டை குறிப்பாக அம்மா சரளாவை எப்படி சம்மதிக்க வைக்கப்போகிறேன் என குழம்புவது, காதலை சொல்லிய பிறகு சந்திக்கும் அப்பாவி இளைஞனுக்காக பிரச்னைகள் என கலந்துகட்டி விளையாடி இருக்கிறார் பாரி. பெரம்பூர் இளைஞனாக அவரின் நடிப்பு அட்டகாசம். அவருடன் சரிக்கு சரி போட்டியாக திரையை ஆக்கிரமித்திருக்கிறார் நாயகி ரம்யா ரங்கநாதன். யாராக இருந்தாலும் நேருக்கு நேர் பேசும் அவரது கதாபாத்திரம் திரையரங்கில் கைதட்டல் வாங்குகிறது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக அவரின் நடிப்பு படத்திற்கான பெரிய ப்ளஸ். இரண்டாம் பாதியில் சேத்தனுடனான அவரின் உரையாடல் காட்சிக்கு சிரிப்பு பறக்கிறது.துணை நடிகர்களின் உழைப்பு படத்தை தூக்கி விட்டிருக்கிறது என்றால் மிகையல்ல. நண்பனைப் போல் நடந்துகொள்ளும் தந்தை சேத்தன், சாதியை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் செல்முருகன், தம்பியாக வந்து ரசிக்கச் செய்யும் சுதர்சன் காந்தி, வெட்கச்சிரிப்புடன் நிகிலா என கலந்து கட்டி விளையாடிருக்கிறது அன்பே டயானா படக்குழு. இதிலும் சேத்தனின் காமெடி கலந்து நடிப்பு சிரிப்பு டானிக். இவர்களுடன் பரிதாபங்கள் கோபியின் வசனங்கள் இரண்டாம் பாதியை ஆக்கிரமித்து பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுள்ளன. காமெடிக்கு முத்திரை பதித்துவிட்டார் கோபி.தெலுங்கு கலந்த தமிழ், ஆங்கிலம் கலந்த தமிழ், பெங்களூரு தமிழ் என கத்தி மேல் நடக்கும் விஷயங்களை படத்தில் சரியாகக் கையாண்டிருக்கிறது பாரியின் எழுத்து.முதல் பாதியில் எதிர்பாராத திருப்பம், இரண்டாம் பாதியை பிடித்து வைத்திருக்க உதவியிருக்கும் திரைக்கதை ஆகியவை படத்தைக் காப்பாற்றியிருக்கின்றன. கிளைமேக்ஸ் வரை ரசிக்கும்படியான வசனங்கள் படத்தை தாங்கிப் பிடித்துள்ளன. சாதிக்கு எதிரான ஒரே ஒரு வசனம், ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்.அதேசமயம் தன்னை பிடிக்காது என நாயகி சொன்ன பிறகு அவரையே பின்தொடரும் நாயகனின் காதலுக்கான அழுத்தமான காரணம் சொல்லப்படவில்லை. தனது தாய்க்காக மட்டுமே சாதியை பின்பற்ற வேண்டிய கட்டாயமிருப்பதாக சொல்லப்பட்டாலும் நாயகனுக்கு சாதியை எதிர்க்க வேண்டிய இடங்கள் வலிமையாக இன்னும் சொல்லி இருக்கலாம்.படத்தின் ஓட்டத்தை தொந்தரவு செய்யாத பின்னணி இசை, பெரம்பூரை அழகிலும் அழகாகக் காட்டிய ஒளிப்பதிவு, தேர்ந்த படத்தொகுப்பு என தொழில்நுட்ப வகையிலும் சிறப்பாக வந்திருக்கிறது அன்பே டயானா.குடும்பத்துடன் ரகளையாக சிரித்து ரசிக்க அன்பே டயானா இந்த வாரத்தின் சிறப்பான சாய்ஸ்...