மகனை இழந்த தம்பதி! ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற வயது வரம்பை தளர்த்திய நீதிமன்றம்!மருத்துவ ரீதியாக தகுதியாக இருக்கும் ஒரு பெண், வயதை மட்டும் காரணம் காட்டி குழந்தைப் பெற்றுக் கொள்வதிலிருந்து தடுக்க முடியாது என்று கூறி, 52 வயது பெண் ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.தொழில்நுட்ப உதவியுடன் இனப்பெருக்க ஒழுங்குமுறை சட்டம், 2021-ன்- கூற்றுப்படி, ஐவிஎஃப் முறையில் குழந்தை பெறுவதற்கான வயது வரம்பை அந்த பெண் அடைந்துவிட்டாலும், நீதிமன்றம், அவருக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.ஜூலை 10ஆம் தேதி இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரரரான பெண்ணும், அவரது கணவரும் ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் தம்பதி ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம், இறுதி முடிவு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவின் முடிவுக்கு உள்பட்டது என்று தீர்ப்பளித்துள்ளது.தங்களது 21 வயது மகன் மஞ்சள் காமாளையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த நிலையில், இயற்கையாகக் குழந்தை பெற தம்பதியால் இயலாமல் போன நிலையில், மருத்துவமனையை நாடியிருக்கிறார்கள்.மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவற்றில் தம்பதி மருத்துவத் தகுதியோடு இருப்பதாக முடிவுகள் வந்தபோதும், ஐவிஎஃப் சிகிச்சை பெற பெண்ணுக்கு குறைந்தது 21 வயதும், அதிகபட்சம் 40 வயதும் இருக்க வேண்டும், ஆணுக்கு குறைந்தது 21, அதிகபட்சம் 55 வயது இருக்க வேண்டும் என்ற சட்டத்தைக் காரணம் காட்டி அவர்களுக்கு ஐவிஎஃப் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.சட்டத்தைக் காரணம் காட்டி, தாங்கள் மீண்டும் பெற்றோவராவதைத் தடுக்க முடியாது என்று வாதிட்ட தம்பதி, நீதிமன்றத்தை நாடி இன்று அனுமதி பெற்றிருக்கிறார்கள். வழக்கு விசாரணையின்போது, இந்த மருத்துவ சிகிச்சையால் நேரிடும் பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் இருவரும் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.