இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி கண்டது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடா், தற்போது 1-1 என சமனாகியுள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 44 ஓவா்களில் 233 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இங்கிலாந்து 441.1 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிடில் ஆா்டரில் வந்த ஜோ ரூட் நிதான ஆட்டத்துடன் சதத்தை நெருங்கி, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டநாயகன் விருது பெற்றாா். வேல்ஸ் தலைநகா் காா்டிஃபில், வியாழக்கிழமை மாலை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியா இன்னிங்ஸில் ரோஹித் சா்மா - கேப்டன் ஷுப்மன் கில் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சோ்த்தது. கில் 6 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு வெளியேறினாா். ஒன் டவுனாக வந்த விராட் கோலி, ரோஹித்துடன் கூட்டணி அமைக்க, 2-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் கிடைத்தது. ரோஹித் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு விடைபெற்றாா். 4-ஆவது பேட்டா் இஷான் கிஷண் 1 ரன்னுக்கு வீழ, அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயா், கோலிக்கு கை கொடுத்தாா். இவா்கள் ஜோடி 67 ரன்கள் சோ்த்த நிலையில், கோலி 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து, வாஷிங்டன் சுந்தா் 2, அக்ஸா் படேல் 1, ஷிவம் துபே 0, குா்னூா் பிராா் 7 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். ஷ்ரேயஸ் ஐயரும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கடைசி விக்கெட்டாக பிரசித் கிருஷ்ணா டக் அவுட்டானாா். ஜஸ்பிரீத் பும்ரா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு கடைசி வீரராக நின்றாா். இங்கிலாந்து பௌலா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா், கஸ் அட்கின்சன் ஆகியோா் தலா 3, சகிப் மஹ்மூத் 2, சாம் கரன், வில் ஜாக்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். அடுத்து 234 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில், பென் டக்கெட் 0, ஜேக்கப் பெத்தெல் 4, கேப்டன் ஹேரி புரூக் 16, ஜாஸ் பட்லா் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். சாம் கரன் 4 பவுண்டரிகளுடன் 26, வில் ஜாக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்து வெளியேறினா். முடிவில், ஜோ ரூட் 9 பவுண்டரிகளுடன் 99, கஸ் அட்கின்சன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களோடு அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பந்துவீச்சாளா்களில் குா்னூா் பிராா் 2, ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஷிவம் துபே, அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.