பொது இடங்களில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகரைச் சோ்ந்த முகேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையத்தின் இரண்டாம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான கடையில் உணவகம் நடத்தி வருகிறேன். இந்த உணவகத்தின் முன் வெயில், மழைக் காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக நிற்க நிழல் குடை அமைத்தேன். ஆனால், அனுமதியின்றி அமைக்கப்பட்டதாகக் கூறி, இந்த நிழல் குடையை அகற்றக் கோரி, சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் குறிப்பாணை அனுப்பப்பட்டது. இந்தக் குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், எனது கடை முன் உள்ள நிழல் குடை போன்ற தகரக் கொட்டகைகளை அகற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள், மனுதாரா் ஆக்கிரமித்து அமைத்திருந்த தகரக் கொட்டகைக்கான புகைப்படங்களை சமா்ப்பித்தனா். இதை நீதிபதிகள் ஆய்வு செய்தனா். பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் அமைத்துள்ள நிழல்குடை போன்ற தகரக் கொட்டகை பொதுமக்களின் நடைபாதையை முழுமையாக ஆக்கிரமித்திருப்பது தெரியவருகிறது. இவை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போன்று தெரியவில்லை. நிரந்தரமாக அமைக்கப்பட்ட இந்த நிழல்குடை பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை மறைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இடத்தில் வாடிக்கையாளா்கள் நின்று உணவு, பானங்களை அருந்தவும், உணவக வணிகத்தை விரிவுபடுத்தவுமே இந்த நிழல்குடை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை சட்டவிரோத கட்டுமானமாகவே இந்த நீதிமன்றம் கருதுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது இடங்களை ஆக்கிரமித்துள்ள கட்டுமானங்களை அகற்ற மாநகராட்சிக்கு முழு அதிகாரம் உள்ளது. நடைபாதையை ஆக்கிரமித்து உணவகம் முன் உள்ள தகரக் கொட்டகையை அகற்ற மனுதாரருக்கு 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதில் நடைமுறை மீறல் எதுவும் இல்லை. எனவே, பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையங்களில் இதுபோன்ற நிரந்தர ஆக்கிரமிப்புகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.