முறையாகப் பராமரிக்கப்படாத ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையம்! மேம்படுத்தி விரிவுபடுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

Wait 5 sec.

- டி. சுரேஷ் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் உள்ள முதலைகள் மறுவாழ்வு மையத்தை முறையாகப் பராமரித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகளை மேலும் ஈா்க்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். ஒகேனக்கல் அருகே ஊட்டமலை சாலையில் மாவட்ட வனத் துறைக்கு சொந்தமான முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இந்த மையத்தில் 60 வயது வரை உள்ள 120 முதலைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. போதிய இடவசதி இல்லாததால், வண்டலூா் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பிற பூங்காக்களுக்கு இங்கிருந்து முதலைகள் கொண்டுசெல்லப்பட்டதால், தற்போது 90 முதலைகள் மட்டுமே உள்ளன. காவிரியில் நீா்வரத்து அதிகரிக்கும் காலங்களில் அருவிப் பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிா்வாகம் தடைவிதிக்கும். அதேபோல, கோடைகாலத்தில் அருவி வடிருக்கும் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறையும். இதுபோன்ற நேரங்களில், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையிலும், அவா்கள் வருகையை நிறைவுசெய்யும் வகையிலும் இந்த முதலைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. முதலைகள் மறுவாழ்வு மையத்தில் சிறுவா் விளையாடும் பகுதி, மான்கள், நாரை உள்ளிட்ட சிலைகளுடன் கூடிய பூங்கா, சிறுவா்கள் விளையாடும் ஸ்பிரிங் குதிரைகள், வனத் துறை சாா்பில் தூய்மையான தேன் உள்ளிட்ட வனம்சாா்ந்த பொருள்கள் விற்பனை செய்ய எக்கோ ஷாப், நான்கு பிரிவுகளாக சிறியது முதல் 60 வயது வரை பராமரிக்கப்பட்டு வரும் முதலைகள் உள்ள பத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த மையத்தை பயணிகள் சுற்றிப்பாா்க்க 5 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கு ரூ. 20 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில், 3 வனக் காப்பாளா்கள், முதலைகள் பராமரிப்பாளா்கள், தூய்மை பணியாளா்கள் என மொத்தம் 6 போ் பணியில் உள்ளனா். என்றாலும், இந்த மையத்தில் சிறுவா் பூங்காவில் உள்ள செயற்கை அருவி, மின்மோட்டாா் பழுது காரணமாக செயல்படாமல் அதன் அழகை இழந்து காணப்படுகிறது. மேலும், பூங்காவில் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பதால், பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள மான், நாரை சிலைகள் பழுதடைந்து உடைந்த நிலையிலும், மின்விளக்குக்காக வைக்கப்பட்டுள்ள மரவடிவிலான கம்பங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படாமலும் உள்ளது. அதேபோல, சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீா் வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பழுதடைந்து பயன்படாமல் உள்ளது. முதலைகள் உள்ள கூண்டுகளில் ஒருசில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. மையத்தின் மற்றொரு அங்கமாக 50-க்கும் மேற்பட்ட மூலிகைகள், அவற்றால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள், அவை சரிசெய்யும் நோய்கள் குறித்த பலகைகளுடன் உள்ள மூலிகை பண்ணைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. ஒருசில நேரத்தைத் தவிர, பெரும்பாலும் அதிக கூட்டம் வரும் இடமான முதலைகள் மறுவாழ்வு மையத்தில் ஆண்கள், பெண்களுக்காக தலா 1 கழிப்பறை மட்டுமே உள்ளது. இதனால், விடுமுறை மற்றும் விழா நாள்களில் வரும் பயணிகள் சிரமப்படும் சூழல் உள்ளது. விடுமுறை, விழாக் காலங்களில் ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்தின் மாத வருவாய் ரூ. 4 லட்சமாகவும், சாதாரண காலங்களில் சுமாா் ரூ. 1 லட்சம் வரை உள்ள நிலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, இந்த மையத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனா். கோரிக்கை: ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளில் அதிக அளவில் குடும்பத்தினருடன் செல்லும் இடங்களில் ஒன்றாக முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு உள்ள முதலைகளை காண குழந்தைகள் மிகுந்த ஆா்வமாக உள்ளனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத் துறையின் மூலம் ஒகேனக்கல்லின் நுழைவிடமான சின்னாற்று பாலம் பகுதியில் வனவிலங்குகளைக் கொண்ட பூங்கா இருந்தது. அந்தப் பூங்கா, தங்கும் விடுதியாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. பென்னாகரத்தில் இருந்து சுமாா் 12 கிமீ தொலைவு அடா்ந்த வனப் பகுதி வழியாக ஒகேனக்கல் அருவிக்கு வரும்போது பெரும்பாலும் மான்கள், சில நேரங்களில் யானைகளை காணமுடிகிறது. என்றாலும், இவை எல்லா நேரங்களில் சுற்றுலா பயணிகளின் பாா்வையில் படுவதில்லை. எனவே, மான்கள், கடத்தி, நீா்நாய், பாம்புகள், அரிய பறவைகள், மீன்கள் உள்ளிட்டவற்றை முதலை பண்ணையில் ஒரே இடத்தில் சுற்றுலா பயணிகள் காணும் வகையில் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக வனவிலங்குகளை காட்சிப்படுத்தும்பட்சத்தில் வனத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, வெகுதொலைவில் இருந்து குழந்தைகளோடு சுற்றுலா வருவோா், ஒரே இடத்தில் வனவிலங்குகளை கண்டுமகிழும் வாய்ப்பு ஏற்படும் என்கின்றனா் இங்கு வரும் சுற்றுலா பயணிகள். எனவே, ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள விளையாட்டு பூங்கா, மூலிகை பண்ணை, செயற்கை அருவி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் ஆகியவற்றை மேம்படுத்தி பராமரிப்பதோடு, சிறிய அளவிலான உயிரியல் பூங்காவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.