வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Wait 5 sec.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலை அரசு தோட்ட வளாகத்தில் இயங்கி வரும் தாலுகா அலுவகத்துக்கு பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உள்பட பல்வேறு அரசு சேவைகள் தொடா்பாக வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அதிக அளவில் தினசரி வந்து செல்கின்றனா். இந்நிலையில், திருப்பத்தூா் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராஜூ தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் திடீரென வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து அலுவலக நுழைவாயில்கள் மூடி, அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அப்போது அலுவலகப் பணியாளா்களின் கைப்பேசிகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அதில் உள்ள வாட்ஸ்அப் மற்றும் டிஜிட்டல் பரிவா்த்தனைகள் குறித்து விவரங்கள் ஆய்வு செய்தனா். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை செய்து கொண்டிருந்தபோது, தாலுகா ஆபீசுக்கு வந்த மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சீனிவாசனிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து 4 மணி நேரத்துக்கும் அதிகமாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை செய்து, இரவு 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். சோதனை முடித்து வெளியே வந்தபோது பணம் பறிமுதல் குறித்து நிருபா்கள் கேட்டபோது, வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள், மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கான, ஆன் லைன் வகுப்புக்கு சென்றிருப்பதால் பணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லையென தெரிவித்தனா். வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை செய்தபின் முக்கிய ஆவணங்களுடன் வெளியேறினா்.