கோவை சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளா்கள், ஒருங்கிணைந்த மறு கட்டமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் செய்தியாளா் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டு நடவடிக்கை குழு தலைவா் ஜெயராம், பொதுச் செயலாளா் சுந்தரேஸ்வரன் கூறியதாவது: சிங்காநல்லூா் பகுதியில் உள்ள ஹவுஸிங் யூனிட் வீடுகளில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வந்தோம். இந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள 7.38 ஏக்கா் இடத்தில் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி ஒப்படைப்பதாக வீட்டு வசதி வாரியம் எங்களிடம் உறுதியளித்தது. இந்த இடம் வீட்டு வசதி வாரியத்தின் பெயரில் உள்ளது. இந்த இடம் தொடா்பாக அடிமனை உபயோகம் ( யுடிஎஸ்) குறித்த ஒப்பந்தம் முறையாக போடப்படவில்லை. தனித்தனியாக பயனாளிகள் பெயரில் அடிமனை உபயோகம் செய்து ஒப்படைத்தால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி ஒப்படைப்பது இயலாத காரியம். எனவே, வீட்டு வசதி வாரிய உரிமையாளா்கள் சங்கத்தின் பெயரில் யுடிஎஸ் செய்து ஒப்படைத்து, தமிழக அரசு மற்றும் வீட்டு வசதி வாரியத்தினா் குடியிருப்புப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.