கோவையில் பெயரளவுக்கு நடத்தப்பட்ட தமிழ்நாடு நாள் விழா போட்டிகள்

Wait 5 sec.

கோவையில் தமிழ்நாடு நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பெயரளவுக்கு நடத்தப்படுவதாக ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று முன்னாள் முதல்வா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18- ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று முந்தைய திமுக அரசு கடந்த 2021-இல் அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு நாள் விழாவுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்படுகின்றன. மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு ரூ.7 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு ரூ.5 ஆயிரம் என பரிசு வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்படுகிறாா்கள். மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசளிக்கப்படுகிறது. 2, 3 ஆவது இடம் பிடிப்பவா்களுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கட்டுரைப் போட்டிக்கு தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை என்ற தலைப்பும், பேச்சுப்போட்டிக்கு நான் விரும்பும் தமிழ்நாடு, அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு, இளைஞா்களின் பாா்வையில் தமிழ்நாடு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு ஆகிய தலைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு விழாவுக்கான அறிவிப்பு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டில் ஜூன் 26 ஆம் தேதி போட்டி அறிவிக்கப்பட்டு ஜூலை 4 ஆம் தேதி நடத்தப்பட்டது. போட்டிக்கான தயாரிப்புக்கு மாணவா்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கிடைத்த நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டி அறிவிப்பை தமிழக அரசு கடந்த 5 நாள்களுக்கு முன்னா்தான் வெளியிட்டது. கோவை மாவட்ட நிா்வாகமோ ஜூலை 15 ஆம் தேதி போட்டி நடைபெறும் என்று ஒரு நாளைக்கு முன்னதாகத்தான் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சியா் அலுவலக பழைய கட்டடத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் சுமாா் 60 மாணவ-மாணவிகள் பங்கேற்றிருந்தனா். இது குறித்து போட்டிக்கு மாணவா்களை அழைத்து வந்திருந்த ஆசிரியா்கள் கூறும்போது, தமிழ்நாடு நாள் விழா போட்டிகள் நடத்தப்படுவதாக நேற்றுதான் எங்களுக்கு தகவல் தெரிவித்தனா். இருப்பினும் தலைமை ஆசிரியா்கள் அறிவுறுத்தியதால் மாணவா்களை அழைத்து வந்திருக்கிறோம். இவற்றைப் பாா்க்கும்போது இதுபோன்ற போட்டிகள் பெயரளவுக்கே நடத்தப்படுவதைப் போலத் தோன்றுகிறது என்றனா். போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் கூறும்போது, போட்டி குறித்து கடைசி நேரத்தில்தான் தகவல் தெரிவித்தனா். இதனால் எந்தவித முன் தயாரிப்புகளையும் மேற்கொள்ளாமல் போட்டிக்கு வந்திருக்கிறோம். இதுபோன்ற போட்டி அறிவிப்புகளை உரிய கால அவகாசம் கொடுத்து அறிவித்தால் நல்ல முறையில் தயாராகி வர முடியும் என்றனா்.