தமிழ்நாடு முதல்வர் விஜய்யை சந்திப்பதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.தமிழ்நாடு முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நடிகராக இருந்தபோதும் தற்போதும் நாளுக்குநாள் ரசிகர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடிகராக இருந்த போது விஜய்யின் படங்கள், பான் இந்திய அளவில் வெளியீடாகும். இதனால், கேரளத்திலும், கர்நாடகத்திலும், வடமாநிலங்களிலும் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய்யின் பெயரை விஜய் தளபதி என்று உச்சரிக்கும் அவரது வடமாநில ரசிகர்கள், கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் முதல்வரானது போலவே, அவர் பிரதமராக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் தளபதியைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் உத்தரப் பிரதேசத்தின் அலிகரைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் அமன் என்பவர், கால்நடைப் பயணமாக உத்தரப் பிரதேசத்தில் தமிழ்நாட்டை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பையுடன் தேசியக் கொடியும், விஜய்யின் புகைப்படத்துடன் அவரது நலத்திட்டங்கள் அடங்கிய பதாகையுடன் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 3 ஆம் தேதி அலிகர் பாதயாத்திரையைத் தொடங்கிய அமன், இரண்டு வாரப் பயணங்களைத் தொடர்ந்து தற்போது தெலங்கானாவின் அதில்பாத்தை அடைந்துள்ளார். ஹைதரபாத் வழியாக தமிழ்நாடு வரும் அமன், இன்னும் 15 நாள்களில் விஜய் தளபதியைச் சந்தித்து விடலாம் என்றும் கூறுகிறார். தெலங்கானாவில் மக்களிடம் பேசிய அமன், தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி கூறியிருக்கிறார். இதேபோன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். வழிநெடுக நடந்து வரும் அமனுக்கு ஆங்காங்கே இருக்கும் மக்கள் உணவு, தங்குமிட வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றனர். இவ்வளது தூரம் பயணிக்கும் அமனுக்கு இது முதல் நீண்ட தூர நடைப்பயணம் அல்ல. இதற்கு முன்னதாக, 2025-ஆம் ஆண்டில், ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியைச் சந்திப்பதற்காக, அவர் அலிகரிலிருந்து ஹைதராபாத்திற்கு கால்நடையாகப் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. A 24-year-old man from Aligarh in Uttar Pradesh is undertaking a cross-country foot march to Tamil Nadu in the hope of meeting Tamil Nadu Chief Minister Vijay Thalapathy.