விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பைக் மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற புதுச்சேரி அரசுப் போக்குவரத்து கழக நடத்துநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுச்சேரி மாநிலம், கோா்க்காடு பகுதியைச் சோ்ந்தவா் திருமாறன் (46). புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.விழுப்புரம் மாவட்டம், வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட சுந்தரிபாளையம் மேம்பாலம் அருகே மாற்றுப் பாதையில் சென்றபோது, எதிரே வந்த தனியாா் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த திருமாறன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று திருமாறனின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.மேலும், இந்த விபத்து குறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.