திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் திறப்பு

Wait 5 sec.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் பயணிகள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இதையடுத்து, இந்த நிலையத்தில் உள்ள விமான இணைப்புப் பாலத்தின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. புதிய முனையத்தில் ஏற்கெனவே விமான நிலையத்தில் இருந்து நேரடியாக விமானத்தில் ஏறுவற்கான 6 விமான இணைப்பு பாலம் உள்ளன. இந்நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் இணைப்பு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, ரூ.11.90 கோடி மதிப்பில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டு வந்தது. இதன் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய விமான இணைப்பு பாலத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு விமான நிலைய இயக்குநா் (பொறுப்பு) ஜி. கோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதன் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான இணைப்பு பாலத்தின் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்துள்ளது. பழைய முனையத்தில் 10 விமான இணைப்பு பாலம் உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையை தொடா்ந்து...: இதன்மூலம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையத்தில்தான் அதிக அளவிலான விமான இணைப்பு பாலம் உள்ளதாக விமான நிலைய இயக்குநா் (பொ) ஜி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். மேலும், கூடுதல் விமான இணைப்பு பாலம் திறக்கப்பட்டதன் மூலம் பயணிகள் எந்தவித சிரமமுமின்றி நேரடியாக விமானத்தில் ஏற முடியும். மழைக்காலங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியும். வயதானவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் பயணிகளுக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளாா்.