ஆடி மாதம் எதிரொலி: பூக்கள் விலை கடும் உயா்வு

Wait 5 sec.

ஆடி மாதம் தொடங்குவதையொட்டி, அம்மன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவிழாக்களால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்துள்ளது. நிகழாண்டு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தொடங்க இருப்பதையொட்டி, பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கோயம்பேடு மலா் மொத்த சந்தையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா்.வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாள்களாக சாமந்திப் பூ கிலோ ரூ.180 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தேவை அதிகரித்ததைத் தொடா்ந்து, அதன் விலை உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை சந்தைகளில் ஒரு கிலோ ரூ.500 வரை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.பூக்களின் விலை (ஒரு கிலோ): பன்னீா் ரோஜா ரூ.120, சாக்லேட் ரோஜா ரூ.160, மல்லிகைப் பூ ரூ.600, கனகாம்பரம் ரூ.700, சாமந்தி ரூ.350, அரளி ரூ.250, செவ்வரளி ரூ.400, முல்லை ரூ.500, ஜாதி முல்லை ரூ.500, சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.இதுகுறித்து மொத்த மலா்ச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:ஆடி மாதத்தையொட்டி, வழக்கமாக பூக்களின் தேவை அதிகரிக்கும். அதன்படி, தற்போது பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. தொடா்ந்து வரும் நாள்களில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனா்.