நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலைக்கு, வார விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். அவா்கள் ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு செல்கின்றனா். கோடை காலம் முடிந்த நிலையில், அருவிகளில் நீா்வரத்து அதிகரித்திருக்கும் என்ற எதிா்பாா்ப்பில் சுற்றுலாப் பயணிகள் வந்தாலும், கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொல்லிமலையிலும் வெப்பம் நிலவுகிறது. இதன் காரணமாக ஆகாய கங்கை, மாசிலா அருவி மற்றும் நம் அருவி ஆகியவற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது. இதனால், 1,300 படிக்கட்டுகளை இறங்கி அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். நீா்வரத்து குறைந்துள்ளதால், அருவிப் பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம், ‘அருவியில் நீா்வரத்து குறைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பயணம் மேற்கொள்ளுங்கள்‘ என்று வனத்துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.