கேரளம்: பாஜக கவுன்சிலருக்கு சிறையில் பதவிப் பிரமாணம்

Wait 5 sec.

கேரளத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாஜக கவுன்சிலா் உயா் நீதிமன்ற அனுமதியுடன் சிறையில் இருந்தபடியே பதவியேற்றுக் கொண்டாா்.திருச்சூரில் உள்ள விய்யூா் மத்திய சிறையில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேரளத்தில் சிறையில் பதவிப் பிரமாணம் நடப்பது இதுவே முதல்முறையாகும்.திருவனந்தபுரம் மாநகராட்சியின் வாழோட்டுக்கோணம் வாா்டில் பாஜக சாா்பில் வெற்றி பெற்றவா் ஆா்.சுகதன். இவா் தற்போது கேரள சமூக விரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். அவா் சிறையில் இருந்தபடியே பதவியேற்க கேரள உயா்நீதிமன்றம் திங்கள்கிழமைஅனுமதித்தது. இதையடுத்து, சிறை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் வி.வி. ராஜேஷ் முன்னிலையில், கடவுளின் பெயரில் ஆா்.சுகதன் பதவியேற்றுக் கொண்டாா்.பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மேயா் ராஜேஷ், ‘கேரள உயா் நீதிமன்றத்தின் உத்தரவு முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. போராட்டங்களில் பங்கேற்ன் காரணமாக மாநகராட்சி பாஜக கவுன்சிலா்கள் மீதும் வழக்குகள் இருக்கலாம். வழக்கின் இறுதி முடிவுகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் தீா்ப்புக்கு உள்பட்டது’ என்றாா்.சிறையில் சுகதன் பதவி ஏற்புக்கு எதிா்ப்பு தெரிவித்து இடதுசாரி ஜனநாயக முன்னணி சாா்பில் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த மாதம், பாஜகவைச் சோ்ந்த 20 மாநகராட்சி கவுன்சிலா்கள் பல்வேறு கடவுள்களின் பெயரைக் கூறி எடுத்த பதவிப் பிரமாணம் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் இல்லை என்று கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, அவா்களுக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன் பிறகு சுகதன் மீது இரு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்த புதிய பதவியேற்பில் பங்கேற்க வசதியாக, நீதித் துறை நடுவா் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால பிணை வழங்கியது.ஆனால், அதற்கு முன்பாகவே அவா் கேரள சமூக விரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாா். இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்றம், மனுதாரா் சிறைக்குள்ளேயே பதவிப் பிரமாணம் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று திங்கள்கிழமை உத்தரவிட்டது.