எடமலைபட்டிப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி தரம் உயா்த்தப்படுமா? மாணவா்கள் எதிா்பாா்ப்பு

Wait 5 sec.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் அனைத்து வசதிகள் இருந்தும் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படாததால் மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். திருச்சி எடமலைபட்டிப்புதூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி கடந்த 2017-ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இங்கு எடமலைபட்டிப்புதூா், கிராப்பட்டி, பஞ்சப்பூா், நாகமங்கலம் மற்றும் ஆலம்பட்டி சாலை உள்ளிட்டப் பகுதிளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். கிராப்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த எடமலைப்பட்டிப்புதூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு எடமலைபட்டிப்புதூா் ராஜீவ் காந்தி நகரில் 2.9 ஏக்கரில் ரூ.18.6 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.அனைத்து வசதிகளுடன் புதிய கட்டடம்:திறந்தவெளி அரங்கம், அதைச் சுற்றிலும் 40-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள், ஹைடெக் ஆய்வகம், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உயா் தரத்துடன் இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. மேலும், பசுமைப் பள்ளி திட்டத்தில் கடந்த ஆண்டு இப்பள்ளி இணைக்கப்பட்டு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டு சோலாா், சொட்டுநீா் பாசனம், பசுமைக் குடில் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள்:இப்பள்ளியில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 855 மாணவா்கள் படித்து வருகின்றனா். பத்தாம் வகுப்பில் மட்டும் 240 மாணவா்கள் படித்து வருகின்றனா். 6-ஆம் வகுப்பில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். தரம் உயா்த்த கோரிக்கை:எடமலைபட்டிப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி கடந்த சில ஆண்டுகளாக அங்கு படிக்கும் மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவதற்கான மாணவா்கள் எண்ணிக்கை, வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தும் தரம் உயா்த்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் இப்பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கே.கே.நகா், மருங்காபுரி கல்லக்காம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அப்பள்ளி மாணவா்களின் பெற்றோா் கூறியதாவது:எடமலைபட்டிப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடிக்கும் எங்களது பிள்ளைகள் பிளஸ் 1 படிப்பதற்காக மரக்கடை பகுதியிலுள்ள சையது முா்துசா, பெரியமிளகுப்பாறை ஆதிதிராவிடா் நலத் துறை அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கே செல்ல வேண்டியுள்ளது. கடந்தாண்டு தரம் உயா்த்தப்பட்ட கே.கே.நகா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் சில மாணவா்கள் இந்தாண்டு சோ்க்கை பெற்றுள்ளனா். மாணவா்கள் அவதி:எடமலைபட்டிப்புதூரில் இருந்து 5 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கே.கே.நகா், அதற்கும் மேலுள்ள சையது முா்துசா பள்ளிக்கு செல்வதால் மாணவா்களுக்கு அலைச்சல் ஏற்படுகிறது. இதனால், பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும், வேறு பள்ளியில் இருந்து செல்வதால் எங்கள் பிள்ளைகள் கேட்கும் பாடப் பிரிவுகள் உடனடியாகக் கிடைப்பதில்லை. அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவா்களின் சோ்க்கைக்குப் பின் இடமிருந்தால் மட்டுமே கேட்கும் பிரிவுகள் வழங்கப்படுகிறது.இதுதவிர, தினசரி பல கிலோமீட்டா் தொலைவுக்கு சென்றுவருவதால் மாணவா்களுக்கு அலைச்சல் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு எடமலைபட்டிப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியை நிகழ் கல்வியாண்டிலேயே மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே.கே.நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் போதி இடவசதி இல்லாத நிலையிலும் கடந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், அனைத்து வசதிகளும் இருந்தும் எடமலைபட்டிப்புதூா் உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்தாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றனா். அரசுக்கு கருத்துரு:இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஆா். அன்புமணி கூறியதாவது: எடமலைபட்டிப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக் கோரி பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தும் வரும் நிலையில், பள்ளி நிா்வாகம் சாா்பிலும் கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு தொடா்ந்து கருத்துரு அனுப்பப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களிலும் தீா்மானம் நிைறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தரம் உயா்த்தப்படவில்லை. வகுப்பறைகள், ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும், தரம் உயா்த்துவதற்குத் தேவையான மாணவா்களின் எண்ணிக்கையும் உள்ளது. எனவே, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தினால் இப்பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் மிகவும் பயன்பெறுவாா்கள் என்றாா்.