கிழக்கு புறவழிச்சாலைத் திட்டத்தை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை மாநகருக்குள் நுழையும் கனரக வாகனங்களைத் தவிா்த்து, நகரின் வெளிப்புறத்தில் மாற்றுப் பாதையில் அந்த வாகனங்களை இயக்கும் விதமாகவும், நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாகவும் கிழக்கு புறவழிச்சாலைத் திட்டம், கடந்த 6 ஆண்டுகள் முன்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலமாக 81 கிலோ மீட்டா் தொலைவுக்கு திட்டமிடப்பட்டது. மதுக்கரையில் தொடங்கி மயிலேரிபாளையம், சூலூா், அன்னூா் வழியாக பெரியநாயக்கன்பாளையம் வரை 6 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை, அவிநாசி சாலை, திருச்சி சாலை ஆகியவற்றை இந்தப் புறவழிச்சாலை இணைக்கும் விதத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 1,400 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்த வேண்டியிருப்பதால் இரு மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், இந்தத் திட்டத்தை எதிா்த்து விவசாயிகள் தரப்பில் தொடா் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து, இந்தத் திட்டத்துக்கான நில அளவீட்டுப் பணிகள் மற்றும் திட்டச் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கிழக்கு புறவழிச்சாலைத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, மேற்கு தமிழகத்தில் அரசுத் திட்டங்கள் குறித்து ஆலோசனைக் குழுவாகச் செயல்படும் கொங்கு குளோஃபல் போரம் அமைப்பின் இயக்குநா் ஜெ.சதீஷ் கூறியது: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முன்மொழியப்பட்ட கிழக்கு புறவழிச்சாலைத் திட்டம் கைவிடப்படுவதாக, பொதுத்தகவல் கேட்பு மூலமாக நெடுஞ்சாலைத் துறை அளித்த பதிலில் தெரிய வந்துள்ளது. இது கோவை மாவட்டத்தின் எதிா்கால வளா்ச்சிக்கு மிகுந்த கவலையளிக்கும் தகவலாகும். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக, இரண்டாவது பெரிய நகரமாகவும், மாநிலத்தின் அதிக வருவாய் ஈட்டும் மாவட்டங்களில் ஒன்றாகவும் கோவை உள்ளது. வலுவான உற்பத்தித் தளம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளா்ச்சி கொண்ட கோவைக்கு இந்தத் திட்டம் சிறப்பான உள்கட்டமைப்பாகும். இது நகரத்தின் நெரிசலைக் குறைத்து, இணைப்பை மேம்படுத்தி, பயண நேரத்தையும் போக்குவரத்துச் செலவுகளையும் குறைத்து, தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார வசதிகள், குடியிருப்பு நகரங்கள் மற்றும் வணிக மேம்பாடுகளின் திட்டமிடப்பட்ட விரிவாக்கத்துக்கு வழிவகுக்கும்.நிலையான நகா்ப்புற வளா்ச்சிக்கு ஆதரவளிக்கும். புதிய முதலீடுகளை ஈா்க்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும். மேலும் இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் பொருளாதார மையங்களில் ஒன்றாக கோவையை மேம்படுத்தும். இந்தத் திட்டத்தை முடக்குவது கோவையின் நீண்டகால வளா்ச்சியைப் பெருமளவில் பாதிக்கும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கோவை கிழக்கு புறவழிச்சாலைத் திட்டத்தை விரைவில் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.