கோலிவுட் ஸ்டூடியோ!

Wait 5 sec.

தனுஷ் சாருக்கு முதல் நன்றி: ரம்யா ரங்கநாதன்!'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'அன்பே டயானா' படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகை ரம்யா ரங்கநாதன், 'முதலில் என் திறமையைக் கண்டறிந்து, 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் வாய்ப்பளித்து, இந்த இடத்துக்கு வரக்காரணமாய் இருந்த தனுஷ் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தச் சிறப்பான கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் பாரிக்கு பெரிய நன்றி.நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், இதற்கு முன்பு பெரம்பூர் பக்கம் போனதே இல்லை. இந்தப் படத்தின் மூலம் ஐ.சி.எஃப். காலனி உள்ளிட்ட அந்தப் பகுதிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரம்பூர் மக்கள், அங்கு வாழும் ஆங்கிலோ இந்தியன் மக்கள் அனைவரும் மிகவும் அன்பானவர்கள், முற்போக்கானவர்கள், உதவும் குணம் கொண்டவர்கள். 'அன்பே டயானா' என்பது அனைவரும் இரண்டு மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து, தங்களின் கவலைகளை மறந்து ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான குடும்பத் திரைப்படமாக இருக்கும். நன்றி!' என்றார். மகள்கள் மீதான உருவ கேலிக்கு குஷ்பு பதிலடி!நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் மகள்கள் உருவக் கேலியைச் சந்தித்து வந்த நிலையில் குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 'இதுதான் என் குடும்பம். அன்பு, நம்பிக்கை, பரஸ்பர புரிதலால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் இன்று இருக்கும் இந்த நிலையை அடைவதற்கு எங்களது எலும்புகள் தேய உழைத்திருக்கிறோம். ரத்தமும் வியர்வையும் சிந்திப் போராடியிருக்கிறோம். சில நேரங்களில் நாங்கள் தடுமாறி, தோல்வியடைந்து, கீழே விழுந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இரட்டிப்பு வேகத்துடன் எழுந்து நின்று வெற்றி பெற நாங்கள் தவறியதே இல்லை.எங்களது பிள்ளைகளை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வளர்த்துள்ளோம். அவர்கள் தங்களது வெற்றியைக் கண்டு தலைக்கனம் கொள்ளவோ, அல்லது பிரபலங்களின் பிள்ளைகள் என்ற தகுதியைத் தவறாகப் பயன்படுத்தவோ நாங்கள் ஒருபோதும் அனுமதித்ததில்லை.அவர்களும் தங்களது அடையாளத்தை எதற்கும் தவறாகப் பயன்படுத்தியதே இல்லை. எங்களது பிள்ளைகளை நினைத்து நாங்கள் மட்டற்ற பெருமிதம் கொள்கிறோம்.ஒரு தாயாக, யாரோ ஒரு முன்பின் தெரியாத நபர், இரண்டு நிமிஷ மலிவான விளம்பரத்துக்காக என் பிள்ளைகளை அவமதிப்பதையோ, அவதூறு பரப்புவதையோ அல்லது பயன்படுத்துவதையோ என்னால் சகித்துக்கொள்ள முடியாது, அனுமதிக்கவும் மாட்டேன். அவர்களின் மனநிலை மிகவும் தரமற்றது, அநாகரிகமானது. அது அவர்களின் வளர்ப்பையே காட்டுகிறது.அவர்கள் பேசும் அதே பாணியிலும் மொழியிலும் என்னால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க முடியும். ஆனால், நான் அதைச் செய்ய மாட்டேன். அப்படிச் செய்தால் அது என் தாய்க்கும், அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த வளர்ப்புக்கும் நான் செய்யும் துரோகமாகிவிடும். நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக, உங்கள் அழுக்குப் பிடித்த, கேவலமான மனநிலையை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள். தன் குட்டிகளைப் பாதுகாக்கப் பாய்ந்து குதறும் புலி மாதிரிதான் ஒரு தாய் என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டிருக்கிறார்.விஜய்சேதுபதி மிஷ்கின் குறித்து கலகலப் பேச்சு: விஜய்சேதுபதி!மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ட்ரெய்ன்'. ரயிலில் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு 'டார்க் த்ரில்லர்' ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதியுடன், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, 'இயக்குநர் மிஷ்கின் நான் சம்பாதித்த அன்பைவிடவும் அதிகம் சம்பாதித்திருக்கிறார்.'ட்ரெயின்' படத்தின் படப்பிடிப்புத் தளம் எப்போதும் கலகலப்பாகவும், எனர்ஜி நிறைந்ததாகவும் இருந்தது. தினமும் சிறப்பாக நடிக்கும் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு 1,000 ரூபாயும், சிறப்பாக வேலை செய்யும் ஒரு டெக்னிஷியனுக்கு 1,000 ரூபாயும் பரிசாக வழங்கினார். பணத்துக்காக அல்ல, இவரிடமிருந்து பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெறுவதற்காக எல்லோரும் கடுமையாக உழைத்தார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புத் தளம் திருவிழா மேடை போல உற்சாகமாக இருந்தது.படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியும் முடிந்ததும், நன்றாக இருந்தால் அனைவரும் கைதட்டிப் பாராட்டுவார்கள். இயக்குநர் மிஷ்கின் தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் கவனித்து, அன்போடு நடத்துபவர். தனக்குள்ள அறிவையும் அன்பையும் பகிர்ந்து கொள்ளும் நல்ல மனிதர். மக்களுக்கு இப்படம் ஒரு 'த்ரில்லர்' படமாக இருக்கலாம். ஆனால், படப்பிடிப்பில் எங்களுக்கு இது ஒரு 'ரொமாண்டிக்' பயணமாக, மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது. தயாரிப்பாளர் தாணு சார் ஆகஸ்டில் இந்தப் படத்தைக் கொண்டுவருவதாகக் கூறியதற்கு நன்றி!' எனக் குறிப்பிட்டார்.