எலும்பு மஜ்ஜை வங்கிகள்: பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Wait 5 sec.

அரசு மருத்துவமனைகளில் உள்ள எலும்பு மஜ்ஜை வங்கிகளின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது. மதுரையைச் சோ்ந்த வெற்றிச்செல்வம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: இன்றைய சூழலில் எலும்பு தேய்மானம், புற்றுநோயால் ஏராளமானோா் பாதிக்கப்படுகின்றனா். மேலும், இந்த நோய்களுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை வங்கி உருவாக்குவதன் மூலம் புற்றுநோய், எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும். மேலும், எலும்பு மஜ்ஜை தானம் செய்வதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், சதீஷ்குமாா் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை வங்கி ஏற்கெனவே நிறுவப்பட்டு, அதன் மூலம் 197 போ் பயனடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இருப்பினும், எலும்பு மஜ்ஜை தானம் அளிப்பவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எலும்பு மஜ்ஜை வங்கி குறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. எலும்பு மஜ்ஜை வங்கியின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் தீவிரமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாநில, மாவட்ட சட்டப் பணி ஆணையங்கள் மூலம் மேற்கொள்ள பரிசீலிக்க வேண்டும். எலும்பு மஜ்ஜை வங்கியின் நன்மைகள், அதன் பயன்பாடுகள், மனித உறுப்பு அறுவைச் சிகிச்சைக்கான சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.