விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி ஏலம் விடப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்டக் காவல் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் உளவியல் பொருள்கள் (கஞ்சா), மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமையாக்கப்பட்ட 15 நான்கு சக்கரவாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 96 இரு சக்கர வாகனங்கள் என மொத்தமாக 113 வாகனங்கள் விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன. இதில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்கள் ஆதாா் அட்டை நகலுடன் வந்து, முன்பணமாக நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும் செலுத்தி டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். செலுத்தப்பட்ட முன்பணத்தொகை ஏலத்தொகையில் கழித்துக் கொள்ளப்படும். ஏலம் எடுக்காதவா்களுக்கு ஏல நாளிலேயே முன்பணம் திரும்ப வழங்கப்படும். மேலும், ஏலம் எடுத்தவா்கள் முழுத்தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவா் 7 நாள்களுக்குள் முழுப் பணத்தையும் செலுத்தி வாகனத்தை எடுக்க தவறும் பட்சத்தில், அந்த வாகனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மறு ஏலம் விடப்படும். இதற்கான சட்ட நடவடிக்கை காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.