விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் காசோலை தொடா்பான 14 வழக்குகள் ரூ.40.49 லட்சத்துக்குத் தீா்வு காணப்பட்டன. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை நிகழாண்டுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், வட்டத் தலைநகரங்களிலுள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஏ.மணிமொழி தலைமை வகித்து, மக்கள் நீதிமன்றத்தின் நோக்கம், இதில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளின் தன்மை போன்றவை குறித்து எடுத்துரைத்து பேசினாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், நீதிபதியுமான சி.ஜெயச்சந்திரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.முருகன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.ராஜேசுவரி, வழக்குரைஞா்கள், வழக்காடிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 6 அமா்வுகள் நடத்தப்பட்டன. இதில், நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள காசோலை தொடா்பான 169-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தொடா்ந்து 14 வழக்குகளில் ரூ.40,49,519-க்குத் தீா்வு காணப்பட்டன.