வங்கக் கடலில் சூறைக் காற்று வீசி வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா். வங்கக் கடலில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட அதிகளவில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், மீனவா்களின் பாதுகாப்பு கருதி, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா். இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் அந்தந்த மீன்பிடி இறங்குதளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.