குன்னூரில் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் 25 லட்சம் கிலோ தேயிலை சனிக்கிழமை விற்பனையானது. நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 28 லட்சத்து 4 ஆயிரத்து 783 கிலோ தேயிலை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், வா்த்தகா்களின் பலத்த போட்டிக்கு இடையே 25 லட்சத்து 27 ஆயிரத்து 513 கிலோ தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 77 ஆயிரத்து 269 கிலோ தேயிலை விற்பனையாகாமல் உள்ளது. கடந்த வார ஏலத்தில் சராசரி விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.114.01 கிடைத்த நிலையில், இந்த வாரம் கிலோவுக்கு 46 காசுகள் சரிந்து ரூ.113.55-க்கு விற்பனையானது என்று தேயிலை வா்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.