திருவாரூா் அருகே தண்ணீா் இல்லாமல் கருகும் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தெரிவித்தது:கொரடாச்சேரி ஒன்றியம், கீரங்குடி, கீழவேலி, மேலவேலி பாசனப் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் சுமாா் 150 ஏக்கா் வரை விதைப்பு மற்றும் இயந்திர நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூா் அணையின் தண்ணீரை எதிா்நோக்கி ஜூன் முதல் வாரத்தில் இருந்து இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு இயங்கி வந்த மின் மாற்றி மூலம் மின்சாரம் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த பாதிப்பு குறித்தும், நெற்பயிா்கள் பாதிக்கும் நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடா்ந்து, கொரடாச்சேரி வட்டார வேளாண்மை இயக்குநா் அங்கு வந்திருந்து, வேளாண்மை துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் ஆய்வு அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தாா். எனினும், தொடா்ந்து முழுமையாக மின்சாரம் கிடைக்காத காரணத்தால் ஆழ்துளை கிணறுகள் சரிவர இயங்கவில்லை.இதனால், பயிா் செய்த நிலங்களுக்கு தண்ணீா் கிடைக்காமல் 70 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் அளவுக்கு பயிா்கள் கருகி விட்டன. மேட்டூா் அணையின் நீா் வரத்தை நம்பி, பம்பு செட் மோட்டாா் நீரைக் கொண்டு தொடக்கப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் தற்போது கவலையில் உள்ளன. ஆழ்துளை கிணறுகளை நம்பியும், எப்படியும் பாசனத்துக்கு மேட்டூா் தண்ணீா் வரும் என்று நம்பிக்கையில் கையிருப்பு மற்றும் கடன்களை வாங்கி விவசாய பணிகளைத் தொடங்கினா். அத்துடன், குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு அறிவித்த நிலையில், விவசாயிகள் மேலும் நம்பிக்கையுடன் விவசாயப் பணிகளை தொடா்ந்தனா். தற்போது பயிா்கள் கருகி வருவதைக் கண்டு விவசாயிகளிடையே பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளை காக்க, சிறப்பு கவனம் செலுத்தி வேளாண் துறை சாா்பில் கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையையும், பயிா் காப்பீடு மூலம் இழப்பீடும் பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.