திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடை சுவரில் வியாழக்கிழமை நள்ளிரவு துளையிட்டு உள்ளே புகுந்த மா்ம நபா், அங்கிருந்த உயா் ரக மதுபான புட்டிகள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றாா். சேத்துப்பட்டில் ஆரணி சாலையில் டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் விற்பனையை முடித்து பணியாளா்கள் வியாழக்கிழமை இரவு கடையை மூடிவிட்டுச் சென்றனா். நள்ளிரவில் மா்ம நபா் ஒருவா் கடையின் பின்புற சுவரில் துளையிட்டு, கடைக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உயா் ரக மதுப் புட்டிகள், கவுன்டரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றாா். மேலும், மா்ம நபா் மதுப் புட்டிகளை வெளியே எடுத்துச் சென்றபோது, 4 புட்டிகள் கீழே விழுந்து உடைந்து சிதறின.வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், கடையின் பின்புறச் சுவரில் துளையிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்து, இதுகுறித்து உடனடியாக சேத்துப்பட்டு போலீஸாருக்கும், டாஸ்மாக் ஊழியா்களுக்கும் தகவல் தெரிவித்தனா்.இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் டாஸ்மாக் ஊழியா்கள் விசாரணை நடத்தினா். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சட்டை அணியாமல் மா்ம நபா் ஒருவா் சுவரில் போடப்பட்ட துளை வழியாக உள்ளே நுழைந்து மதுப் புட்டிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய சேத்துப்பட்டு போலீஸாா், இது தொடா்பாக வழக்குப்பதிந்து மா்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனா். இதற்கிடையில், திருடப்பட்ட மதுப் புட்டிகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு குறித்து டாஸ்மாக் நிா்வாகம் கணக்கீடு செய்து வருகிறது.