கோவை: கோவை சூலூரில் அதிகாரிகளுக்கு தெரியாமல் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கமலி திடீர் ஆய்வு நடத்தியதோடு, முதல்வர் ஜோசப் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.கோவை மாவட்டம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கமலி இன்று அதிகாரிகளுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு விதித்திருந்த கட்டுப்பாட்டை மீறி, இந்த ஆய்வின்போது எடுக்கப்பட்ட 'ரீல்ஸ்' வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை, செங்கதுறை வெங்கடாபுரம் மற்றும் அரசூர் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு அமைச்சர் இன்று நேரடியாகச் சென்றார்.உள்ளூர் அதிகாரிகள், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆகிய யாருக்குமே தகவல் தெரிவிக்கப்படாமல் இந்த ஆய்வு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது.இந்த திடீர் ஆய்வின் போது, மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கான மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா, மருந்துகளின் தரம் மற்றும் அவற்றின் காலாவதி தேதி சரியாக உள்ளதா என்பது குறித்தும், மருத்துவமனைப் பதிவேடுகள் (Registers) முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்றும் அமைச்சர் தீவிர தணிக்கை மேற்கொண்டார்.இது குறித்து உள்ளூர் காவல்துறையினரிடம் கேட்டபோது, அமைச்சர் ஆய்வுக்காக இப்பகுதிக்கு வந்த விவரம் எங்களுக்கே தெரியாது என்று தெரிவித்தனர்.நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் யாரும் ஆய்வுக்கு செல்லும் போது அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் தேவையின்றி 'ரீல்ஸ்' விடியோக்களாகப் பதிவிடக் கூடாது. மக்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் அனைத்து அமைச்சர்களுக்கும் மிகவும் கண்டிப்புடன் அறிவுறுத்தியதாகக்கூட இல்லை நேரடியாகவே எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.ஆனால், முதலமைச்சர் எச்சரித்த அடுத்த நாளே, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தனது திடீர் ஆய்வு குறித்த காட்சிகளைத் தொகுத்து, பின்னணியில் முதலமைச்சர் விஜய்யின் திரைப்படப் பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் 'ரீல்ஸ்' விடியோவாகப் பதிவிட்டுள்ளார்.முதலமைச்சரின் அறிவுறுத்தலையும் மீறி, அவரது பாடலையே பின்னணி இசையாக வைத்து அமைச்சர் இந்த விடியோவை வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களிலும் தற்போதைய மிக முக்கியப் பேசும்பொருளாக மாறியுள்ளது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட அந்த கால்நடை மருத்துவமனையின் உட்புறச் சுவர்கள், மேற்கூரை ஆகியவை சிதலமடைந்து காணப்படும் நிலையில் அதனை அமைச்சர் கவனிக்காமல் சென்றிருக்கிறாரே என வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். Even after the Chief Minister's warning! Animal Husbandry Minister's inspection 'Reels' go viral! The song is the highlight!