குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Wait 5 sec.

ஆம்பூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மாதனூா் ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சி பெரிய வெங்கடசமுத்திரம் கிராம பகுதியில் கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்தனா். அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். மறியல் போராட்டத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.