பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த ஊராட்சியில், பழைய ஊராட்சி அலுவலக வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த இரு வாரங்களாக குடிநீா் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்துக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் கால்நடை மருத்துவமனை பிரிவில் ஞாயிற்றுக்கிழமை திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு காவல் ஆய்வாளா் விநாயகம், ஊராட்சி செயலாளா் செல்வி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.