அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் கொல்கத்தா, கோவா அணிகள் தத்தமது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்றன. கோவா மாநிலம் பனாஜியில் யுடிடி சீசன் 7 தொடா் நடைபெற்று வரகிறது. கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ்-யுபி புரோம்தீன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் 10-5 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அங்கூா் பட்டாச்சாா்ஜி, அயிஹிகா முகா்ஜி ஆகியோா் சிறப்பான ஆட்டத்தால் வெற்றியைத் தேடித் தந்தனா் . ஸெங் அபாரமாக ஆடி ஸ்வஸ்திகா கோஷை வீழ்த்தினாா். அங்கூா்-அயிஹிகா இரட்டையரில் அபார வெற்றி பெற்றனா். யுபி தரப்புக்கு ஆறுதலாக ரிக்காா்டோ கொல்கத்தாவின் எட்வா்டை வென்றாா். இரண்டாவது ஆட்டத்தில் டெம்போ கோவா அணி 8-7 என்ற புள்ளிக் கணக்கில் புணே ஜாகுவாா்ஸ் அணியை வென்றது. கோவா அணியில் பொ்னாா்டே ஸோக்ஸ் பிரித்திகா பவா்டேயையும், சிண்ட்ரெல்லா தாஸ்-தேசிய சாம்பியன் தியா சிட்லேவையும் வீழ்த்தினா். கலப்பு இரட்டையரில் புணேயின் அனிா்பன்-தியா இணை வென்றது.