மூன்று தலைமுறைப் பெண்களின் ஆழ்மனக் குரல் - எஸ். ஜானகி!

Wait 5 sec.

- பூங்குழலிஎஸ். ஜானகி அவர்கள் பலருக்கு ஒரு மகளாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, தாயாக இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு அவர் நானாக இருந்த தருணங்களே அதிகம்.என்னுடைய எல்லா உணர்வுகளுக்குமான குரல் அவருடையதாக இருந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல ஏறத்தாழ மூன்று தலைமுறைப் பெண்களுக்கு அவர்களின் ஆழ்மனக் குரலாய் அவர் ஒலித்தார்.அதிலும் இன்று போல் அல்லாமல், பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே இடம் கொடாத ஒரு சமூகக் கட்டமைப்பில், அவர்களின் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் வடிகாலாக இருந்தவர் ஜானகி.ஜானகி யமுனையாற்றங்கரையில் கண்ணனைத் தேடிய போது, பெண்கள் அவருடன் சேர்ந்து உருகவில்லை. மாறாக, பெண்கள் தங்கள் கண்ணனைத் தேடும் போது அவர்களுடன் அவர் துணை நின்றார்.இளம் பருவத்தின் தொடக்கத்தில் நின்று உலகை ரசிக்கும் பெண்ணுடன் "புத்தம் புது காலை..."யை ரசிப்பதில்.. கட்டுக்களிலிருந்து விடுபட்டு சுதந்திர உணர்வை அனுபவிக்கும் பெண்ணுடன் இணைந்து "காற்றுக்கென்ன வேலி..." என்று கடற்கரை மணல் வெளியெங்கும் கேட்கும் வகையில் உரத்துப் பாடுவதில்.. வாழ்வின் வேதனைகளோடு தன் மகனை கொஞ்ச நினைக்கும் பெண்ணுடன் சேர்ந்து, "சொல்லவா நான் ஆராரோ... நம் சொந்தங்கள் இங்கு யார் யாரோ... உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ" என்று விம்முவதில்… வெளிப்படுத்த இயலா காதலின் துயரில் நிற்கும் பெண்ணின் சார்பாக, அவளுடைய காதலனிடம் "காற்றில் எந்தன் கீதம் காணாமல் ஒன்றைத் தேடுதே" என்று தூது செல்வதில் என..ஒரு பெண்ணின் மகிழ்ச்சியை, துக்கத்தை, காதலை, தாபத்தை, கோபத்தை, தயக்கத்தை, வெட்கத்தை, குழப்பத்தை, திமிரைக்கூட வெளிப்படுத்த குரல் தந்தவர் ஜானகி. அதிலும், அவள் என்ன உணர்கிறாளோ, அந்த உணர்வை அப்படியே தன் குரலில் கொண்டு வந்தவர் அவர். பாடத் தெரியாத பெண்களுக்கும், அந்த வரிகளும் இசையும் மனதுக்கு மிக நெருக்கமாகத் தோன்றினாலும் அதைத் தாங்களே பாட முடியாத தருணங்களில், அவர்களுக்காக வந்து அவர்களுடைய உணர்விலேயே பாடினார். அதுதான் ஜானகி.இன்றும் தங்கள் உணர்வுகளை உலகுக்குத் தெரிவிக்க, வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ்களில் ஜானகியையே துணைக்கு அழைக்கின்றனர் பல பெண்கள்.தமிழ் அவரது தாய்மொழி அல்ல. ஆனாலும் பாடல் வரிகளை இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பாடாமல், அதன் உணர்வையும் களத்தையும் முழுமையாக உள்வாங்கி தன் குரலில் கொணர்ந்தார். தமிழில் மட்டுமல்ல 20 மொழிகளில் தான் பாடிய 48,000 பாடல்களில் ஒவ்வொன்றுக்கும் இதைச் செய்வது எத்துணை பெரிய உழைப்பு! இந்த மெனக்கெடலையே இசைஞானி இளையராஜா தனது இரங்கல் செய்தியில் "ஜானகி ஒரு கடின உழைப்பாளி" என்று குறிப்பிட்டார்.எஸ்.பி.பியும் எஸ். ஜானகியும் மக்கள் மனதிற்கு நெருக்கமாக இருப்பது இதனால்தான். அவர்கள் என்றும் நம் குரலாய் ஒலித்துக்கொண்டே இருப்பார்கள்.பாடகி ஜானகி பாடுவதற்குக் கடினமாக அமைந்த பாடல் இதுதான்!The inner voice of women across three generations – S. Janaki