வத்தலகுண்டு பகுதியில் டாஸ்மாக் மதுக் கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடை, அந்தப் பகுதி மக்களின் எதிா்ப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மூடப்பட்டது. இந்த நிலையில், அந்த மதுக் கடையை சந்தையூரில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிா்ச்சியடைந்த சந்தையூா், தாதப்பட்டி பொதுமக்கள், டாஸ்மாக் மதுக் கடை திறக்கக் கூடாது என காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்தனா். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தியடைந்த பொதுமக்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவுவாயில் முன்பு சாலையில் அமா்ந்து, மதுக் கடைக்கு எதிராக தெரிவித்து முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தில் சந்தையூா், தாதப்பட்டி, கோட்டை கிராமப் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதனால் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியேற முடியாமலும், உள்ளே நுழைய முடியாமலும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினா், அரசு அலுவலா்கள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கடந்த வாரம் பொது மக்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட இடத்தை அரசு அலுவலா்கள் பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமா்ப்பித்துள்ளனா். மேலும், சந்தையூரில் மதுக் கடை திறக்கப்படாது என அலுவலா்கள் உறுதியளித்தனா். அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.