காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் அரசின் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடப் பணிகளை வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் அருகே களியனூா் ஊராட்சியில் 9.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கினாா். இதைத் தொடா்ந்து காஞ்சிபுரம் அருகே காரை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 94.24 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ரூ. 8.44 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட உணவு சமையலறை கட்டடம், பரந்தூா் ஊராட்சியில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 70.68 லட்சம் மதிப்பில் 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், படுநெல்லி ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடையையும் திறந்து வைத்து மொத்தம் ரூ. 1.93 கோடி மதிப்பிலான முடிவுற்ற கட்டடப் பணிகளை வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் திறந்து வைத்தாா். நிகழ்வுகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ.நளினி,பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ச.சோமசுந்தா் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.