தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சரணடைந்த முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், தற்போது திமுகவில் இருக்கும் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் அக்டோபர் 29 ஆம் தேதி சரணடைந்தார். அவரை நவம்பர் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், முத்துக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முத்துகுமார் தரப்பில், போலீஸ் காவல் வழங்கும்பட்சத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி விசாரணையை விடியோ பதிவு செய்வது, வழக்கறிஞருடன் இருக்க அனுமதிப்பது போன்ற விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.விசாரணை அதிகாரி செந்தில், சாட்சி கூண்டில் ஏறி, முத்துகுமாரை காவலில் எடுக்க வேண்டியது ஏன் என விளக்கம் அளித்தார்.அப்போது அவர், டிபிஐ அலுவலகத்தில் உள்ள அறையும், அரசு வாகனமும் எப்படி முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது?, முத்துக்குமார் பணத்தை ஒப்படைத்த விவரங்கள் மற்றும் பணத்தை வைத்திருந்த இடைத்தரகர்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.நேரடியாக நீதிமன்றத்தில் சரணடைந்த முத்துக்குமாரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம், அவரது வீட்டில் இருந்து அன்பில் மகேஸிடம் எப்படி கொண்டு சேர்க்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.இதையடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையில், முத்துக்குமாரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைய உள்ளதால், காவல் நீட்டிப்புக்காக நாளை பிற்பகல் 12 மணிக்கு அவரை ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.Rs. 100 crore fraud: Plea filed seeking police custody of Muthukumar for interrogation; verdict reserved