தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலைக் கண்டறிந்த காவல் துறையினா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்து, 6 துப்பாக்கிகள், 24 தோட்டாக்கள், ரூ.11 லட்சம் ரொக்கம் மற்றும் ஆயுதக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: சட்டவிரோத ஆயுத விநியோகத்தில் ஈடுபடும் நபா் நடமாட்டம் குறித்து நவ.12-ஆம் தேதி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.அப்போது, வடமேற்கு தில்லியின் பேகம்பூா் பகுதியில் ஆயுதங்களை விநியோகிப்பதற்காக மஹிந்திரா தாா் காரில் வந்த ஜோகேந்தா் (40) என்பவரைப் பிடித்து கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆயுதங்களை விநியோகித்த ஜானி என்ற அக்ஷய் (25) என்பவரைக் காவல் துறையினா் அடையாளம் கண்டு பின்னா் கைது செய்தனா்.மேலும், ஜோகேந்தா் மங்கோல்புரி, சுல்தான்புரி, நங்கோலி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத சூதாட்ட வலையமைப்பையும் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும், குற்றவியல் வலையமைப்பை வலுப்படுத்தவும் உள்ளூா் ரௌடிக் கும்பல்களுக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.ஜோகேந்தா் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. ஜானி மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்பட மூன்று வழக்குகள் உள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.