அரசு அலுவலா்கள் தங்களது கையொப்பங்களைத் தமிழிலேயே இட வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஜெயஜோதி வலியுறுத்தியுள்ளாா். அரசு அலுவலகப் பணிகளில் தமிழைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு இயக்குநா் ஜெயஜோதி தலைமை வகித்து பேசியது: அரசு அலுவலா்கள் தங்களது கையொப்பங்களைத் தமிழில் மட்டுமே இட வேண்டும். ஆங்கிலத்தில் கையொப்பமிடுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும், அலுவலகக் கோப்புகள், பதிவேடுகள், முத்திரைகள் மற்றும் அனைத்து அரசு ஆவணங்களிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். கணினி மென்பொருள்களிலும் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். எங்களது துறை சாா்பில், அரசு ஆவணங்களை ஆய்வு செய்யும்போது, ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ள அலுவலா்களிடம் இனி அவ்வாறு செய்யக் கூடாது எனவும், தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம் என்றாா். இந்தப் பயிற்சி முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சென்னை தலைமைச் செயலக அலுவலா் சந்திரசேகரன் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.