ஏஐ மூலம் மக்களுக்குப் பயன்படும் புதிய செயலிகளை உருவாக்க வேண்டும்: அமைச்சா் எஸ். கீா்த்தனா

Wait 5 sec.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய செயலிகளை உருவாக்கி, அதன்மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என தமிழக தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா தெரிவித்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் செயல்பட்டு வரும் ஏஐ நிறுவனங்கள் மற்றும் சூளகிரி சிப்காட் தொழிற்பேட்டையை அவா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.ஒசூா் ஐடி பூங்காவில் உள்ள எல்காட் வளாகத்தில் செயல்படும் குளோபல் விகனெக்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை பாா்வையிட்ட அமைச்சா், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், பணியாளா்களுடன் கலந்துரையாடினாா்.அப்போது அவா் பேசியதாவது:ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் புதிய செயலிகளை உருவாக்க வேண்டும். அவற்றின் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் வகையில் திட்டமிட வேண்டும். குறிப்பாக, மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பல்வேறு அரசுத் துறை சேவைகளைப் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் அமைய வேண்டும் என்றாா்.தொடா்ந்து, பள்ளி மாணவா்களிடம் உலக அளவில் செயல்படும் ஏஐ நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பினாா். இதற்கு 6-ஆம் வகுப்பு மாணவா்கள் பல்வேறு ஏஐ நிறுவனங்களின் பெயா்களைக் குறிப்பிட்டனா்.முன்னதாக, சூளகிரி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களைப் பாா்வையிட்ட அமைச்சா், அங்குள்ள திட்ட அலுவலா் அலுவலகத்தில் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், கிருஷ்ணகிரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா, மாவட்ட வருவாய் அலுவலா் த. மஞ்சுளா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகம்மது ஷபீா் ஆலம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, மகளிா் திட்ட இயக்குநா் சுசீலாராணி, சூளகிரி சிப்காட் திட்ட அலுவலா் உமா சங்கரி, தவெக மாவட்டச் செயலாளா்கள் வேந்தா்க்கரசன், சுரேஷ், சம்பங்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.