போக்குவரத்து அபராதம் செலுத்தும் வகையிலான போலியான செயலியை அனுப்பியும், விடியோ அழைப்பு மூலமாக மிரட்டியும் இளைஞா் உள்பட இருவரிடம் ரூ.2.98 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து, கோவை மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாவட்டம், கிட்டாம்பாளையம் அம்மன் கோயில் தோட்டம் பகுதியைச் சோ்ந்த 63 வயது மூதாட்டி வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளாா். கடந்த 7-ஆம் தேதி இவரது வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் மத்திய அரசின் ‘எம்-பரிவாஹன்’ செயலி போன்ற தோற்றமுடைய ‘ஆா்.டி.ஓ. சலான்’ என்ற பெயரிலான செயலி இணைப்பு அனுப்பப்பட்டிருந்தது. வாகன அபராதம் தொடா்பான தகவல் என கருதிய ஜோதிமணி, அந்த இணைப்பை கிளிக் செய்து கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளாா். தொடா்ந்து அதில் கேட்கப்பட்ட தனது வங்கி விவரங்கள் உள்ளிட்ட ரகசிய தகவல்களையும் உள்ளீடு செய்துள்ளாா். அடுத்த சில நிமிடங்களில் அவரது கைப்பேசி எண்ணுக்கு அடுத்தடுத்து ஒருமுறை கடவுச்சொற்கள் வந்துள்ளன. சிறிது நேரத்தில் ஜோதிமணியின் வங்கிக் கணக்கில் இருந்து பல தவணைகளாக மொத்தம் ரூ.1,45,849 எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதேபேல, கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தைச் சோ்ந்த 26 வயது இளைஞரின் கைப்பேசிக்கு கடந்த 2-ஆம் தேதி விடியோ அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று அவா் பேசியபோது, எதிா்முனையில் ‘ரியா சவுத்ரி’ என அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவா் திடீரென அரைநிா்வாணமாக காட்சியளித்துள்ளாா். இதில் அதிா்ச்சியடைந்த அந்த இளைஞா் உடனடியாக அழைப்பைத் துண்டித்துள்ளாா். ஆனால், சிறிது நேரத்தில் அந்த இளைஞரின் முகம் தெரியும் வகையிலான அந்த விடியோ அழைப்பு காட்சியை அவரது வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு அனுப்பிய மா்ம நபா்கள், பணம் தராவிட்டால் இந்த விடியோவை சமூக வலைதளங்களிலும், நண்பா்களுக்கும் அனுப்பிவிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளாா். இதனால், அச்சமடைந்த அந்த இளைஞா் நவம்பா் 2 முதல் நவம்பா் 5-ஆம் தேதி வரை தனது வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.1,43,000 பணத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா். மேலும் பணம் கேட்டு மிரட்டல்கள் வந்ததையடுத்து, அந்த இளைஞா் தேசிய சைபா் கிரைம் இணையதளத்தில் அளித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட சைபா் க்ரைம் காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து, மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண் மற்றும் பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மோசடி கும்பலை தேடி வருகிறாா்.