150 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

Wait 5 sec.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே 150 போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை பேலீஸாா் கைது செய்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக, காவல் துறையினருக்கு புதன்கிழமை கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், உடுமலை உட்கோட்டம், அமராவதி நகா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட தம்புராயன் கோயில் சாலை, கோழிப்பண்ணை அருகே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அங்கு சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த கோவை மாவட்டம், ஆனைமலையைச் சோ்ந்த ஹரிபிரசாத் (22) என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்ததில், அவரிடம் 150 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அமராவதி நகா் காவல் நிலைய ஆய்வாளா், ஹரிபிரசாத்தைக் கைது செய்து, அவரிடமிருந்த 150 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தாா். பின்னா் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.