இந்த வாரம் கலாரசிகன் - 15-11-2026

Wait 5 sec.

ஆண்டுதோறும் தினமணி 'தீபாவளி மலர்' வெளிவந்ததும், அதை எடுத்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் செல்வது என்பதைப் பல ஆண்டுகளாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். அதேபோல இந்த ஆண்டும் சென்றபோது, பணி ஓய்வுபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டனின் நினைவு சட்டென வந்தது. பாரதியாரை நினைக்கும்போது, பாரதி படைப்புகளைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பாரதி ஆய்வாளராகிய முனைவர் ய.மணிகண்டனை நினைக்காமல் இருந்துவிட முடியுமா என்ன?'தினமணி' தீபாவளி மலரில் இவரது கட்டுரையும் இடம் பெற்றிருந்ததால், அவருக்கு ஒரு பிரதியை நேரில் கொடுக்கலாம் என்று நினைத்து அழைத்தேன். என்னை சந்தித்தது மட்டுமல்லாமல், தனது புத்தகங்களைப் பத்திரப்படுத்த வாடகைக்கு எடுத்திருக்கும் சிறிய இடத்துக்கும் அழைத்துச் சென்றார். அவரது வீட்டில் புத்தகங்கள் வைக்க இடமில்லாத நிலையில் கூடுதலாக இந்த இடத்தை வாடகைக்கு எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.பெரும்பாலான தமிழறிஞர்களுக்கு, குறிப்பாகத் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லோருக்குமே இந்தப் பிரச்னை இருக்கிறது. பலருக்கும் சொந்த வீடு கிடையாது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, பொக்கிஷமாகச் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களை முறையாகக் கட்டி எடுத்துக்கொண்டு வீடு மாறுவது ஏற்படுத்தும் மன உளைச்சலையும், சிரமங்களையும் சொல்லி மாளாது.அரிய நூல்கள், ஆராய்ச்சிக் குறிப்புகள் மட்டுமல்லாமல், பல தமிழறிஞர்கள் சேகரித்து ஒப்படைத்த அல்லது கையொப்பமிட்டுத் தந்த புத்தகங்களும் அதில் அடங்கும்.பாரதியார், பாரதிதாசன் குறித்த ஆய்வுகளுக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்திருக்கும் முனைவர் ய. மணிகண்டன் போன்ற தமிழறிஞர்களுக்கு, தமிழக அரசு இலவசமாக வீடு கொடுக்காவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்களது புத்தகங்களைப் பாதுகாக்க வசதியாகக் குறைந்த வாடகைக்கு சற்று விசாலமான வீட்டை ஒதுக்கித் தந்து ஆதரிக்கக் கூடாதா? என்கிற ஆதங்கம் என்னுள் எழுந்தது. அவரது சேகரிப்பில் இருக்கும் அத்தனை புத்தகங்களும் தமிழ்ப் புதையல்கள். அவை அழிந்தால் இழப்பு தமிழுக்குத்தானே...முனைவர் ய. மணிகண்டனை ஒதுக்கிவிட்டு யாரும் பாவேந்தர் பாரதிதாசன் குறித்த ஆய்வில் ஈடுபட முடியாது. ஷேக்ஸ்பியரின் 'மெர்ச்சன்ட் ஆஃப் வெனீஸ்' நாடகத்தை 'வெனீஸ் நகர வர்த்தகர்' என்று தமிழாக்கம் செய்தது மட்டுமல்லாமல், பாவேந்தர் மேலும் பல நாடகங்கள் எழுதியிருப்பதாகவும், அவை அச்சில் வரவில்லை என்றும் தெரிவித்தார் முனைவர் மணிகண்டன். அந்த நாடகங்கள் மன்னர் மன்னன் குடும்பத்தினரிடம் இருக்கின்றனவா? என்பது தெரியவில்லை என்கிறார். இந்தியாவுடன் புதுவை இணையக் கூடாது என்று போராடிய பாவேந்தர் 'குயில்' என்ற பெயரில் தினசரி ஒன்றையும் வெளிக் கொணர்ந்தார் என்கிற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.புதுவையில் 'மாத்ரு கஃபே' என்கிற உணவு விடுதி நடத்தி வந்த கவிஞர் ஜோதிதாசன், பாரதிதாசனின் குடும்ப நண்பர். அவரிடம் 'குயில்' இதழின் அனைத்துப் பிரதிகளும் இருப்பதாக அறிந்தார் முனைவர். அவை அனைத்தையும் மிகவும் சிரமப்பட்டு அவரிடமிருந்து பெற்று ஒளிநகலெடுத்து வைத்திருக்கிறார்; பாதுகாக்கிறார். பாரதிதாசன் ஆய்வுக்கு அதைவிட முக்கியமான ஆதாரம் வேறென்ன இருக்க முடியும்?இத்தனையும் சொல்லிவிட்டு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறை தலைவராகப் பணியாற்றி கடந்த ஆண்டு அக்டோபரில் பணி ஓய்வுபெற்றார் பேராசிரியர் முனைவர் ய. மணிகண்டன். அதற்குப் பிறகு 2026 ஜூன் மாதம் கல்வியாண்டு முடியும்வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. பணி ஓய்வுபெற்ற 2025 அக்டோபருக்குப் பிறகு பணி நீட்டிப்பு மாதங்களுக்கு இதுவரையில் ஊதியம் வழங்கப்படவில்லை. ஜூலை மாதத்துக்குப் பிறகு வழங்க வேண்டிய ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. அவருக்குத் தரப்பட வேண்டிய பணிக்கொடை (கிராஜுயுட்டி) உள்ளிட்ட எந்தவித ஓய்வூதியப் பலன்களும் வழங்கப்படவில்லை. தமிழகத்தின் தலைசிறந்த மொழி ஆய்வாளர், எழுத்தாளர், சுவடி ஆராய்ச்சியாளரின் கதியே இப்படி என்றால், தமிழ் எப்படி வளரும், வாழும்? இதை யாராவது மாண்புமிகு அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜ்மோகனின் கவனத்துக்கும், மாண்புமிகு முதல்வரின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லுங்களேன். தமிழறிஞர்களுக்கு மரியாதை இல்லையென்றால், பிறகென்ன தமிழ்நாடு, தமிழ் வாழ்க, தமிழினப் பெருமை? சாகித்திய அகாதெமி தொடர்ந்து பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறது. ஏ.சி. செட்டியாரின் 'தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்', அகிலனின் 'தமிழ்ச் சிறுகதைகள்', சா. கந்தசாமியின் 'நவீன தமிழ்ச் சிறுகதைகள்', முகிலை ராசபாண்டியனின் 'புதிய தமிழ்ச் சிறுகதைகள்' வரிசையில் இணைகிறது பாரதிபாலன் தொகுத்திருக்கும் 'சமகாலத் தமிழ்ச்சிறுகதைகள்'.21-ஆம் நூற்றாண்டு சிறுகதை எழுத்தாளர்கள் சிலரது படைப்புகளைத் தொகுத்திருக்கிறார் பாரதிபாலன். அதில் அவரது 'நீல நிறக் கனவு' சிறுகதையும் இணைகிறது. அஜயன் பாலாவில் தொடங்கி, இமையம், ஜெயமோகன், பாஸ்கர் சக்தி, எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களுடன் வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இன்றைய பல எழுத்தாளர்களும் இடம்பெறுகிறார்கள். 36 சிறுகதைகளையும் படிக்கும்போது 'நூற்றாண்டு மாறியதைப்போல, தலைமுறை மாறியதைப்போல சிறுகதைகளின் வடிவமும், போக்கும், கதை சொல்லும் உத்தியும் மாறியிருப்பதைப் பார்க்க முடிகிறது.'தினமணி' நாளிதழின் ஈரோடு மாவட்ட நிருபர் கே.விஜயபாஸ்கர் தனக்கு வாட்ஸ்ஆப்பில் வந்திருந்த குறுஞ்செய்திக் கவிதையை அனுப்பித் தந்திருந்தார். பகிர்ந்து கொள்கிறேன்.அகற்றி மாளவில்லை-வீட்டுக்கு வெளியேவெடிக் குப்பைகள்கைப்பேசியில்வாழ்த்துக் குப்பைகள்!