கல்வியே வாழ்க்கை அல்ல!

Wait 5 sec.

எங்கள் பள்ளியில் படித்து முடித்து கல்லூரி சென்ற மாணவிகள் பிளஸ் 2 வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வாங்க வந்திருந்தார்கள். அவர்களிடம் கல்லூரிப் படிப்பு எப்படி இருக்கிறது? எனக் கேட்டதும் திறந்த வாய் மூடாமல் பேசினார்கள். பள்ளியில் ஆசிரியர்களே தட்டெடுத்து வைத்து உணவு பரிமாறி பிசைந்து வாயில் ஊட்டியதுபோல இருந்தது, கல்லூரியிலோ எங்கே உணவு இருக்கிறது எனத் தேடி எடுத்து சாப்பிடுங்கள் என்பதுபோல சொல்லி விட்டார்கள்.கல்லூரியில் எல்லா நேரங்களிலும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருக்கிறது. பள்ளிக் காலத்திலேயே இன்னும் கொஞ்சம் நன்றாகப் படித்திருக்கலாமோ, இன்னும் கொஞ்சம் வெளி உலகம் குறித்து அறிந்து வைத்திருந்திருக்கலாமோ, இன்னும் நடைமுறைத் திறன்களை கை வரப்பெற்றிருக்கலாமோ, இன்னும் நாட்டு நடப்பு குறித்து அதிகமாக சிந்தித்திருக்கலாமோ என்று இப்போது அறிவில் உரைக்கிறது என்று புலம்பினார்கள்."பள்ளிப் படிப்பு முடிந்த பிறகுதான் உண்மையான வாழ்க்கை என்றால் என்னவென்று நீங்கள் கற்கத் தொடங்குவீர்கள். அப்போது ஏகப்பட்ட மெனக்கெடல்கள் தேவைப்படும்; அதுதான் உண்மையான சவால். அந்த சவாலை எதிர்கொள்ள இந்த அடிப்படை பாடப்புத்தக அறிவு மிக அவசியம்' என்று நம் பள்ளி ஆசிரியர்கள் அன்று சொன்ன அறிவுரை, இப்போதுதான் 200% உள்ளுக்குள் சென்று சேர்கிறது என முடித்தார்கள்.அத்தனை பக்குவத்துடன் அவர்கள் பேசுவதைப் பார்க்க ஒருபுறம் வியப்பாகவும், மற்றொருபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. பாடப் புத்தகங்களைத் தாண்டிய மற்றொரு பாதை அவர்களுக்கு புலப்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.என் உறவினர் மகள் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்களுள் எடுப்பவள்தான். ஆனாலும், பக்கத்தில் இருக்கும் மளிகைக் கடைக்குச் சென்று பொருள் கேட்டு வாங்கத் தெரியாது எனும் நிலையில்தான் இருக்கிறாள். ஏன் என்று கேட்டால் பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்பு, அதை விட்டால் வீடு என்று அதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்ததால், எந்த இடத்துக்கும் அவளை அனுப்பி பழக்கவில்லை. அதனால், வெளி உலகத்தை எதிர்கொள்ளவே இப்போது அவளுக்குப் பதற்றமாக இருக்கிறது.மேலும், அவள் பக்கத்து வீடுகளில் இருக்கும் பிள்ளைகளுடன் கலந்து பேசி விளையாடியது இல்லை. படிப்பது ஒன்றே முக்கியம் என்று அவளை அப்போது நாங்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இப்போது ஒரு சின்னத் தோல்வியைக்கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எந்த ஒரு விளையாட்டிலும் அவள் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறாளே தவிர, சின்னத் தோல்வி வந்தால் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். வெற்றி-தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் அவளுக்கு வரவில்லை. அதைக் காலம் கடந்து உணர்ந்து வருத்தப்படுகிறோம் என்றார் உறவினர்.சென்னையில் வசிக்கும் மற்றொரு தோழியின் பதின்பருவ மகள் காய்கறிகளெல்லாம் எந்த மரத்திலிருந்து காய்க்கிறது என தன் தாயிடம் அப்பாவியாக கேட்டிருக்கிறாள். நகரத்து குழந்தைகளின் வாழ்வியல் சூழல் கிராமத்து குழந்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இதில் ஆறுதல்பட வேண்டிய ஒரே விஷயம் இவர்கள் எல்லோரையும் இணைத்து சமன்படுத்தும் கருவியாக கல்வி அமைகிறது என்பதுதான். கல்வி சார்ந்த பாடப் புத்தகம் மட்டுமே இவர்களை சமன்படுத்திவிடுமா?, பாடப்புத்தகம் என்பது வாழ்க்கையின் வரைபடம்தான், வாழ்க்கை அல்ல; வரைபடத்தை வைத்துக்கொண்டு நாம் பயணம் செய்யலாம்; ஆனால், வரைபடத்தையே பயணம் என்று நம்பி விட்டால் நாம் எங்கும் செல்ல முடியாது.மதிப்பெண்களைத் தாண்டி மனிதர்களை உருவாக்கும் கல்வி எப்போது சாத்தியமாகும்?, ஒரு மாணவரிடம் இந்தக் கணக்கை எப்படி போடுவது?, இந்த சூத்திரத்தை யார் கண்டுபிடித்தார்? என்று கேட்டால் பாடப் புத்தகத்தில் படித்த விடையை, பெயரை சொல்லக்கூடும். ஆனால், தோல்வியடைந்த நண்பனை எப்படி தேற்றுவாய்?, பொது இடத்தில் ஒருவர் தவறு செய்தால் எப்படி செயல்படுவாய்?, உன்னிடம் இருக்கும் பணத்தை எப்படி பாதுகாப்பாக சேமிப்பாய்?, ஆரோக்கியமாக எப்படி சமைப்பாய்? என்று கேட்டால் அவனுடைய பதில்கள் தடுமாறக்கூடும்.இந்தத் தடுமாற்றத்துக்குக் காரணம் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான அனுபவங்களை கல்வியின் ஒரு பகுதியாக நாம் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தாததுதான். தேர்வறையில் விடையைக் கண்டறியும் ஒரு மாணவன், வாழ்க்கையின் சிக்கல்களில் தீர்வைக் கண்டறியவும் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால்தான் வகுப்புத் தலைவர்களைக்கூட சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என பள்ளிகளில் நெறிமுறை வகுத்திருக்கிறார்கள். எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம்.பாடப் புத்தகத்துக்கு வெளியேயான கற்றலின் அவசியத்தை இந்திய கல்விக் கொள்கையும் அங்கீகரித்துள்ளது. "தேசிய கல்விக் கொள்கை-2020' மனப்பாடக் கல்வியைக் கடந்து விமர்சனச் சிந்தனை, படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன், ஒத்துழைப்பு போன்ற திறன்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. "கற்றது கைமண்ணளவு- கல்லாதது உலகளவு' என்றார் ஒüவை. நாம் கையில் வைத்திருக்கும் புத்தகம் கைம்மண்; வெளியே காத்திருக்கும் உலகமோ கடல்.காமராஜர் பிறந்த நாளையொட்டி, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள மாணவிகள் தங்கள் பெயரை பதிவு செய்யலாம் எனக் கேட்டு வந்தபோது ஒரு வகுப்பில், ஒரு மாணவிகூட பெயர் கொடுக்க முன்வரவில்லை. "ஏன் இப்படி ஆர்வமே இல்லாமல் இருக்கிறார்கள்' என்று வினவியதற்கு, "நாங்கள் படிக்க வேண்டிய பாடமே நிறைய இருக்கிறது, அதிலும் நாளை 5 பாடங்களிலும் சிறு தேர்வுகள் எழுத வேண்டும், அத்துடன் மூன்றே பரிசுகள்தான் வழங்குகிறார்கள். அவற்றில் எங்களுக்கு ஏதேனும் ஒன்று கிடைக்கும் என்று எந்த நிச்சயமும் இல்லை. அத்துடன் நாங்கள் திக்கித் திணறிப் பேசி தோல்வி அடைந்தால் சக மாணவிகள் முன்னிலையில் அவமானமாகிவிடும்' எனப் பதில் கூறினார்.போட்டியில் வெற்றி பெறுவதைவிட பங்கெடுப்பதே முக்கியம். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி; தோல்வி அடைந்தால் அது ஒரு நல்ல அனுபவம் என்று அறிவுறுத்தினாலும், அவர்களுக்கு அவர்களின் வயதுக்கேற்ற நல்உதாரணங்கள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு தினமும் புதிய புதிய ஆளுமைகளின் அசாத்தியங்கள் குறித்துச் சொல்ல வேண்டும். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, இன்றைய தலைமுறை அப்படி!பிரிட்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வைப் பார்ப்போம். 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த மாணவர்களிடம் நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் என்ன சொன்னார்கள் தெரியுமா? "நாங்கள் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ விரும்புகிறோம்' என்று பதில் கூறினர்.அதன்பிறகு 30 ஆண்டுகள் கழித்து அதே பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த மாணவர்களிடம் அதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு இந்த மாணவர்கள் "நாங்கள் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம்' என்று பதில் சொன்னார்கள். மாணவர்களின் மனதில் எப்படி இப்படி ஒரு மாற்றம் என்று அவர்கள் மீண்டும் ஆய்வு செய்த போது, இவர்களைப் போல நாம் உருவாக வேண்டும் என்று நினைக்கக்கூடிய நல்ஆளுமைகள் குறைந்து போனதுதான் இந்த மனமாற்றத்துக்குக் காரணம் என்று கண்டறிந்தனர்.வெவ்வேறு பின்னணி குணம் கொண்ட மனிதர்களுடன் பழகும்போதுதான் சகிப்புத்தன்மையும் குழுவாக வாழும் குணமும் வளர்கிறது. மதிப்பெண்களைத் தாண்டி நமக்காக நிற்கும் நல்ல நண்பர்களையும் வழிகாட்டிகளையும் கண்டறிவது வாழ்க்கைப் பயணத்தை எளிதாக்கும்.மாணவர்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகள் என்ன என்பதை அவர்களே கண்டறிய இயலும். கலை, விளையாட்டு மற்றும் பயணங்கள் மூலமாக நம்மைப் பற்றி நாமே முழுமையாக புரிந்துகொள்ள முடியும். பாடப் புத்தகத்தில் தஞ்சை பெரிய கோயிலைப் பற்றி படிக்கும்போது இருக்கும் உணர்வைக் காட்டிலும், அந்தக் கோயிலுக்குச் சென்று அந்த மண்ணை மிதிக்கும்போது இருக்கும் உணர்வு ஆயிரம் மடங்கு அதிகம்.அந்த நிஜ அனுபவம் அந்த பிரம்மாண்டத்தை நமக்குள் அப்படியே கடத்தும். அப்படி நாம் செல்லும்போது, நாம் ஏற்கெனவே பாடப்புத்தகத்தில் படித்ததை தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதன்மூலம் நமக்கு பரந்துபட்ட அறிவு கிடைக்கும். நம் உலகப் பார்வையும் விரிவடையும். புத்தகப் புழுவாக மற்றும் அறிதிறன்பேசியிடம் சரணடைந்து கிடக்காமல் வெளியுலகைப் பார்ப்பதும், இயற்கையை ரசிப்பதும் மனதுக்கு பேரமைதியைத் தரும்.கல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே; அதுவே முழு வாழ்க்கையும் அல்ல. பாடப் புத்தகங்கள் எதிர்காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பணியைத் தரலாம். ஆனால், ஒரு சிறந்த மனிதனாக வாழ்வதற்கான வழியை இந்த உலகமும் அதன்மூலம் கிடைத்த அனுபவங்களுமே கற்றுக் கொடுக்க முடியும்.பாடப்புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் பாடம் முடிந்து விடுகிறது. ஆனால், வாழ்க்கையின் முதல் பக்கம் அப்போதுதான் திறக்கிறது.கட்டுரையாளர்:எழுத்தாளர்.