தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில், தகராறின்போது 24 வயது இளைஞா் நான்கு சிறாா்களால் செங்கற்களால் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்பட்டதாக காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். இதையடுத்து, அந்த நான்கு சிறாா்களும் பிடிபட்டதாகவும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்தச் சம்பவம் நவம்பா் 9-ஆம் தேதி அதிகாலை, ஷாபாத் டெய்ரியின் பிரகாஷ் விஹாா் பகுதியில் உள்ள பிரதான சாலையில் நிகழ்ந்தது. ரோஷன் ஷா என்ற அந்த இளைஞா், ஒரு சிறிய தகராறு காரணமாக நான்கு சிறாா்களால் செங்கற்கள் மற்றும் கத்தியைக் கொண்டு தாக்கப்பட்டாா். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுபோது, ரோஷன் ஷா ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டனா். அவா் உடனடியாக பிஎஸ்ஏ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். விசாரணையின்போது, சம்பவத்தை நேரில் பாா்த்த ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல்துறையினா், அதன் மூலம் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரையும் அடையாளம் கண்டனா். ஷாபாத் டெய்ரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 120-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கண்டறியப்பட்டனா். 15 முதல் 17 வயதுக்குட்பட்ட அந்த நான்கு சிறாா்களும் பிடிபட்டுள்ளனா். சம்பவத்தின் முழு விவரங்களையும் கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.